ஜெ.,வின் மகள் என கூறும் அம்ருதா பற்றி தினகரன்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் எனக் கூறும் பெங்களூர் அம்ருதாவின் பின்னணி குறித்து தனக்கு ஏதும் தெரியாது என்றும் உச்சநீதிமன்றமே அவரது மனுவை தள்ளுபடி செய்துவிட்ட நிலையில் அந்த கேள்வியை ஏன் கேட்கிறீர்கள் என்றும் டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா (36) என்பவர் நேற்று உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் தான் ஜெயலலிதாவின் மகள் என்றும் இதனை தன்னுடைய வளர்ப்பு பெற்றோரான ஜெயலலிதாவின் தங்கையும் அவரது கணவரும் இறக்கும் தருவாயில் கடந்த மார்ச் மாதம் தான் தன்னிடம் தெரிவித்தனர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அவர், ஜெ.,வின் உடலை தோண்டியெடுத்து டி.என்.ஏ சோதனை செய்தால் உண்மை தெரிந்து விடும் என்றும் கூறியிருந்தார்.

ஆனால் அடிப்படை ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இருப்பினும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர அம்ருதாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதற்கிடையே இன்று திருச்சியில் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. அ.தி.மு.கதான் எங்களது இயக்கம்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எங்களுக்கும் தி.மு.கவிற்கும் மட்டும் தான் போட்டியிருக்கும். வருமான வரித்துறை ரெய்டு என்பது ஆர்.கே.நகர் தேர்தல் முடியும் வரை நடைபெறும் என்று தெரிவித்தார்.

மேலும் அவர், எங்களுடைய அணி சார்பில் தனிக்கொடியை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. இரட்டை இலை சின்னத்தின் வழக்கின் தீர்ப்பில் கொடி மற்றும் கட்சி அலுவலகம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

எங்களது சார்பில் இரட்டை இலை வழக்கில் மேல் முறையீடு செய்யப்படும். விரைவில் இந்த ஆட்சியானது வீட்டிற்கு அனுப்பப்படும்.

ஜெயலலிதாவின் மகள் எனக் கூறும் அம்ருதா குறித்து தனக்கு எதுவும் தெரியாது. உச்சநீதிமன்றமே அவருடைய மனுவை தள்ளுபடி செய்துவிட்ட நிலையில் இதுகுறித்து ஏன் என்னிடம் கேள்வி எழுப்புகிறீர்கள் என்றார் தினகரன்.