தன்னைத் தானே கடவுள் அவதாரமாகவும், கடவுளாகவும் அறிவித்துக் கொண்டு தனி ராஜ்யமே நடத்திக் கொண்டிருக்கும் சாமியார்களின் எண்ணிக்கைக்கு என்றுமே நம் நாட்டில் பஞ்சமிருந்ததே இல்லை.
அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலகட்டத்தில் பக்தி என்ற பெயரிலும் ஆன்மீகம் என்ற பெயரிலும் பேராசை கொண்ட பணக்காரர்களையும், திரைத்துறையினரையும், சாமானிய மக்களையும் ஏமாற்றி வருவது அவ்வப்போது தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களில் அப்பட்டமாக வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டாலும் அதனால் கிடைக்கும் விழிப்புணர்வுக்கு மட்டும் ஆயுள் என்னவோ வெகு குறைவே!
இதோ இன்று பரமஹம்ச நித்யானந்தா ஆபாச வீடியோ வழக்கில், வீடியோ குறித்த தனது இறுதி ஆய்வு முடிவை டெல்லி தடயவியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. ஆய்வு முடிவின்படி அந்த வீடியோ போலி இல்லை. உண்மையானது தான் என உறுதி செய்துள்ளது டெல்லி தடயவில் ஆய்வு மையம்.
2010 ஆம் ஆண்டில் சாமியார் நித்யானந்தாவும் அவரது பக்தையும் நடிகையுமான ரஞ்சிதா இடம்பெற்ற ஆபாச வீடியோ ஒன்றை தனியார் தொலைக்காட்சி ஊடகம் ஒன்று கேண்டிட் முறையில் அப்பட்டமாக வெளியிட்டு பரபரப்புச் செய்தியாக்கி பார்வையாளர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
அந்த வீடியோவில் இருப்பது தான் அல்ல, அது மார்பிங் செய்யப்பட்டது என்று கூறி நித்யானந்தா தரப்பில் மேல் முறையீடு செய்திருந்தார்கள்.
இதையடுத்து வீடியோவின் உண்மைத் தன்மையை ஆராய கர்நாடக காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அவர்கள் பல கட்டத் தடயவியல் சோதனைகளுக்குப் பிறகு அந்த வீடியோ மார்பிங் செய்யப்பட்டதல்ல, அது ஒரிஜினல் வீடியோ தான் என அவர்கள் சோதனை முடிவைத் தெரிவிக்கவே, அதையும் ஏற்றுக் கொள்ள மறுத்தது நித்யானந்தா தரப்பு.
அதையடுத்து மீண்டும் டெல்லி தடயவியல் ஆய்வு மையத்தில் இந்த வீடியோவை பரிசோதித்து உண்மையை வெளியிடச் சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
அப்போதிருந்தே தமிழகத்தில் தன்னைத்தானே கடவுள் எனக் கூறிக் கொண்டு ஆன்மீகப் போர்வையில் கோடி, கோடியாக சாமானிய மக்களிடம் பணம் பறித்து வேள்வி என்றும் யக்ஞம் என்றும் யாகம் என்றும் புதிய மொந்தையில் பழைய கள் கதையாக முன்பு பல ஆன்மீகப் பிரச்சாரகர்களால் பலமுறை சொல்லப்பட்ட கதைகளையே ஹைடெக் மொழியில் மாற்றிச் சொல்லி மூளைச்சலவை செய்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் பல ஆன்மீக அமைப்புகளின் மீது ஏராளமான கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்தன.
இதில் நித்யானந்தா போலவே சிலமுறை ஊடகங்களில் பரபரப்புச் செய்தியான பெருமை கல்கி பகவானுக்கும் உண்டு.
இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் பின்பற்றக்கூடிய வலிமை மிக்க இரு சமயப் பிரிவுகள் சைவமும், வைணவமும்.
இதில் கல்கி பகவான் மக்களிடம் ஜல்லியடித்துக் கொண்டிருப்பது வைணவத்தைப் பிரதானமாக வைத்து. நித்யானந்தா ஜல்லியடிப்பது சைவத்தைப் பிரதானமாகக் கொண்டு.
இவர்கள் இருவருக்குமே தங்களை மகா விஷ்ணு அவதாரமாகவும், சிவ அவதாரமாகவும் கற்பிதம் செய்து கொண்டு அதை அப்படியே மக்களை நம்பச் செய்து மூளைச்சலவை செய்து தாஸர்கள் அல்லது டிவோட்டிகள் என்ற பெயரில் தங்களது அடிமைகளாக மாற்றுவதில் அலாதிப் பிரியம்.
ஆனால் இவர்கள் தங்களது சுயநலத்திற்காகக் கட்டமைக்கும் இந்த மோடி மஸ்தான் வேலைகளை மக்களை எப்படி நம்பச் செய்கிறார்கள்? என்பதை விளக்க இந்த ஒரு கட்டுரையில் இடம் போதாது!
கர்மா, பூர்வ ஜென்மா, ஊழ்வினை, பிறவிப்பயன், பகவான் சேவை, போன்ற மந்திர வார்த்தைகளைக் கொண்டு முதலில் அப்பாவி மக்களை தங்களை நோக்கி சுண்டி இழுக்கும் இவர்களுக்கு ஏஜண்டுகளாகப் பணியாற்ற தனி பக்தாள் படையே இருக்கிறது.
வாழ்வாதாரத்துக்கான ஊதியத்தை ஈட்டும் வேலை நேரம் போக மிச்ச மீதி நேரங்களிலெல்லாம் அவர்களது ஒரே வேலை இந்த வேலை தான்.
பகவான் அப்படிச் செய்தார், இப்படிச் செய்தார், தங்களுக்கு இப்படிக் காட்சி கொடுத்தார், தங்களிடமிருந்த இடத்தை கோயில் கட்ட தானமாக அளிக்கச் சொன்னார், உடனே மறுபேச்சின்றி ‘ பகவானே இது நீங்கள் எனக்களித்தது, எடுத்துக் கொள்ள என்னிடம் கேட்பானேன்… என்று கேள்விக்குறியாக வளைந்து வணங்கி காலில் விழுந்து அழுது புரண்டு தன்னிடமிருக்கும் கடைசிப் பைசா வரைக்கும் ஸ்வாமிஜீக்களுக்கு இறைக்கத் தயாராக இங்கு பல லட்சம் தாஸானுதாஸர்கள் இருக்கிறார்கள்.
அவர்களது ஒரே குறிக்கோள் எப்படியாவது தங்களது பாவக்கறைகளை இந்த ஸ்வாமிஜீயின் சேவா குறைத்து… கடைசியில் ஒன்றுமில்லாமல் போகச் செய்தால் சரி. அவ்வளவே!
அப்படி ஏமாந்த சோனகிரிகளாக இந்த ஸ்வாமிஜீக்களையும், சாமியார்களையும், பகவான்களையும் நம்பி தங்களது முழுச் சொத்தையும் எழுதி வைத்து கடைசியில் சாகக் கிடைக்கையில் அனாதைகளாக வெளியேற்றப்பட்டு அழுது புலம்பியவர்களும் இங்கு அனேகம் பேருண்டு.
ஆனால் எந்த உண்மைக்கும் ஆயுள் தான் குறைவாயிற்றே! பொய்யல்லவா இந்த பூமியை ஆண்டு கொண்டிருக்கிறது.
இம்மாதிரியான போலி ஆன்மீக இயக்கங்களின் பிரதான மாயவலை பன்னாட்டு நிறுவனங்கள் முதல் உள்ளூர் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணிபுரிவோர் வரையிலும் மன அழுத்தத்தில் சிக்கி தங்களுக்குத் தாங்களே அந்நியப்பட்டு சற்றே சுதந்திரமாக மூச்சு விட ஒரு சிறு இடைவெளி கிடைக்காதா? என ஏங்கும் அப்பாவி இளைஞர்களை வலை வீசிப் பிடிப்பது தான்.
இதற்கென இளைஞர்களை மூளைச் சலவை செய்வதற்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்படும் யூத் யக்யங்கள் அங்கு நடத்தப்படுவதுண்டு.
இவர்களது அமைப்புகளில் சற்றே பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கென்றே நடத்தப்படும் முக்தி யக்யங்கள் வேறு அங்கு உண்டு, பெண்களுக்கான மகிளா யக்யங்கள், இத்தகைய பகவான்களுக்கு சேவை செய்வதொன்றே வாழ்வில் முக்தியை அடைவதற்கான ஒரே ஷார்ட் கட் என்று அப்பாவி மக்களை நம்பச் செய்தல், இப்படித்தான் இவர்களின் காலம் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
உண்மையில் இவர்களில் எவருக்கும் பொது நலம் என்பதோ, சமூக நலம் என்பதோ கிஞ்சித்தும் கிடையாது என்பதே நிஜம். ஆனால் அதை நம்பத்தான் இன்று நம்மிடையே ஆட்கள் இல்லை.
இவர்கள் நடத்தும் இந்த மகா, மகா யக்யங்களின் குறிக்கோள்களைப் பட்டியலிடத் தொடங்கினால்; கிட்டத்தட்ட அது பில்லி, சூனியக்காரர்களின் வேலைகளுக்குச் சற்றும் சளைத்தது இல்லை என்பதை உணரலாம்.
செல்வந்தர்களாக ஆக்க ஒரு யக்யம்;
எதிரிகள் இருக்குமிடத்தில் புல், பூண்டு கூட முளைக்காமல் நிர்மூலமாக்க ஒரு யாகம்.
அப்பாவி மக்களுக்கு நன்மை செய்வதாக மாயையில் சிக்க வைத்து அவர்களை இம்மையிலேயே முக்தி அடைய வைக்க ஒரு மகா முக்தி யக்யம்.
படிக்காமலே பரீட்சையில் 100 மார்க் வாங்க ஒரு யக்யம்!
அதுமட்டுமா?!
பிரசங்கம் என்ற பெயரில் பழைய புராணக் கதைகளைத் தூசி தட்டி பட்டி டிங்கரிங் பார்த்து புது மோஸ்தரில் பிரசவித்து அவற்றைத் தங்களது புத்தம் புதுக் கருத்துக்களாக நம்பச் செய்து மேடை மேடையாக முழங்கி பல லட்ச ரூபாய்களை டொனேஷன், அன்பளிப்பு என்ற பெயரில் அரசை ஏமாற்றி வரி கட்டாமல் அள்ளிச் செல்ல உபாயம் கண்டுபிடித்தல்.
தங்களை அணுகும் ஊழல் அரசியல்வாதிகள் சம்பாதித்த கணக்கில் வராத பிரமாண்ட வருமானத்துக்கான பினாமிகளாகச் செயல்படுதல்.
தங்களது வேர்களை இங்கே விட்டு விட்டு அந்நிய மண்ணில் கோடி, கோடியாகச் சம்பாதிக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களாகக் குறி வைத்து அணுகி அவர்களையும் மூளைச்சலவை செய்து இந்தியாவில் தாங்கள் கொள்ளையடித்த பணத்தை அங்கே சென்று பதுக்கல், அங்கே அடித்த பணத்தைக் கொண்டு நாய்க்கு பிஸ்கட் போடுவதைப் போல இந்திய பக்தர்களை மயக்குவது. இப்படி எல்லாவிதமான மாய்மால வித்தைகளும் தெரிந்தவர்கள் தான் போலிச்சாமியார்கள்!
அவர்களின் தவறான நோக்கங்கள் அப்பட்டமாகத் தெரிந்த போதும் அதைப் புறம்தள்ளி கடவுளென்றும், பகவான் என்றும், வழிகாட்டியென்றும், குருஜீயென்றும், தலையில் தூக்கிச் சுமப்பவர்கள் எவராயினும் அவர்கள் பாரம் சுமக்கக் கடமைப்பட்டவர்களே! அவர்களிடம் சென்று மீண்டும், மீண்டும் மனமுவந்து பெற்றுக் கொள்ளுங்கள் உங்கள் பாவமூட்டைகளை!
மேலே குறிப்பிட்ட நித்யானந்தா விஷயத்திலும் கூட, கடந்த ஏழு ஆண்டுகளாகியிருக்கின்றன அந்த வீடியோவை உண்மையானது தான் என்று நிரூபிக்க.
நிரூபணமான பிறகும் கூட… இந்த விஷயத்தில் இப்போதும் என்ன மாறி விடப்போகிறதென்று தான் தெரியவில்லை.
ரஞ்சிதா விவகாரம் தீவிரமாகப் பற்றி எரிந்து கொண்டிருக்கையில், காவல்துறை விசாரணை நடைபெற்ற சமயத்திலும் கூட அந்த அருவருக்கத்தக்க வீடியோவை வெளியிட்ட லெனின் கருப்பசாமி என்பவரிடம் நித்யானந்தா பேரம் பேசுகையில்;
‘ராமகிருஷ்ணர் சாரதா அம்மையார் கூட இருக்கலயா?!
விவேகானந்தருக்கு நிவேதிதா இல்லையா?
புராணத்தில் கிருஷ்ணன் கூட கோபியர்கள் கூட இல்லையா?!’ என்பது போல வசனம் பேசி தனது செயலை நியாயப்படுத்தவே முயன்றிருக்கிறார் நித்யானந்தா!
ஆண், பெண் உறவை அசிங்கமாகக் கருதும் அளவுக்கு முதிர்ச்சியடையாத கொள்கைகள் கொண்டதல்ல இந்து மதம், ஆனால், அப்பழுக்கற்ற ஆன்மீகவாதிகளாகத் தங்களைத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஆன்மீக குருக்கள், தங்களது மடத்தைச் சார்ந்தவர்கள் சிற்றின்பங்களை மறந்து பேரின்பமான முக்தியை மட்டுமே நோக்கமாகக் கொள்ளவேண்டும் என்று வரிக்கு வரி மூளைச் சலவை செய்யும் ஆன்மீக குருஜீக்கள் தங்களை நம்பி வரும் பெண் பக்தர்களை மாயம் செய்து மயக்கி பாலியல் இச்சைகளுக்குப் பலியாக்கி விட்டு அதை நியாயப்படுத்த முயல்வதும், பொய்யென்று மறுப்பதும் அவர்களது உண்மையான சுயரூபத்தை தோலுரித்துக் காட்டுவதாகவே இருக்கிறது.
ஆனாலும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக இவர்களுக்காக பணத்தை வாரி இறைத்துப் படாடோபமான சத்சங்க நிகழ்ச்சிகள் நடத்த மக்கள் எப்போதும் உறுதுணையாக இருப்பது தான் மிகப்பெரிய ஆச்சர்யமாக இருக்கிறது.
இந்து மதத்தில் மட்டுமே இப்படியென்பதில்லை, கிறிஸ்தவத்தில் சாத்தானை, பில்லி, சூனியத்தை, பேய்களைப் பொது மேடையில் நுட்பமான வாய்ச்சவடால்களுடனும், புன்னகையுடனும் விரட்டி, பாதிக்கப்பட்டவர்களை மூர்ச்சையடையச் செய்யும் மகானுபாவர்களும் இந்த லிஸ்டில் தான் வருகிறார்கள்.
சொல்லுங்கள் மக்களே! நாமென்ன ஜமுக்காளத்தில் வடிகட்டிய அத்தனை பெரிய முட்டாள்களா?!
பாம்புகளுக்குப் பால் வார்க்கும் அடிமுட்டாள்தனத்தை எப்போது விடப்போகிறோம் நாம்?!