திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே எடையூர் அடுத்த அம்மலூர் பிள்ளையார் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 50). நகை தொழிலாளி. இவரது மனைவி ராசாத்தி (43). இவர்களுக்கு ராஜ்குமார், அரிகரசுதன் என்ற 2 மகன்களும், கீதா (25) என்ற மகளும் உள்ளனர்.
ராஜ்குமார் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இளைய மகன் அரிகரசுதன் மனநோயாளியாக வீட்டிலேயே பெற்றோருடன் வசித்து வந்தார்.
நேற்று இரவு கணேச பட்டர், அவரது மனைவி ராசாத்தி, மகள் கீதா ஆகியோர் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கினர். அரிகரசுதன் வீட்டின் வெளிப்பகுதியில் படுத்திருந்தார்.
இன்று காலை 6 மணியளவில் அரிகரசுதன் வழக்கம் போல் கண்விழித்து எழுந்து வீட்டுக்குள் சென்றார். அப்போது வீட்டில் அறையில் தந்தை- தாய்- தங்கை கீதா ஆகியோர் விஷம் குடித்த நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
3 பேரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதார். அப்போது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களும் வந்து பார்த்த போது 3 பேரின் உடல்களை கண்டு திடுக்கிட்டனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டது பற்றி எடையூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைதொடர்ந்து போலீசார் விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
வீட்டில் பிணமாக கிடந்த கணேசன், ராசாத்தி, கீதா 3 பேரும் பாலில் நகை செய்ய பயன்படுத்தும் ‘சயனைடு‘ கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
பின்னர் 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
பெற்றோருடன் தற்கொலை செய்து கொண்ட கீதாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் திருவாரூர் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. வருகிற தை மாதத்தில் திருமணம் நடைபெற பேசி முடிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாப்பிள்ளை வீட்டார், திருமணம் செய்ய விருப்பம் இல்லை என்று கணேசனிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த கணேசன், தனது மனைவி, மகளுடன் சயனைடு தின்று தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.