வடகொரியா புதிய பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளதாக ராணுவ அதிகாரிகளை மேற்கோள் காட்டி தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த செய்தியை அமெரிக்க அரச வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.
தென் பியாங்யாங் பிராந்தியத்தில் பியாங்யாங்கில் இருந்து கிழக்கு நோக்கி அந்த பாலிஸ்டிக் ஏவுகணை செலுத்தப்பட்டதாக தென்கொரிய செய்தி முகமையான யான்ஹப் தெரிவிக்கிறது.
ஏற்கெனவே ஏவப்பட்ட ஏவுகணைகளைப் போல, இந்த ஏவுகணையும் ஜப்பான் மீது பறந்து சென்றதா அல்லது வேறு எந்த திசையில் செலுத்தப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
வடகொரியாவின் அணு ஆயுதத்திட்ட முன்னெடுப்பு தொடர்பாக பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், வடகொரியா இந்த ஆண்டு பல ஏவுகணைகளை ஏவியுள்ளது. அதில், கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளும் அடங்கும்.
தற்போது ஏவப்பட்டுள்ள ஏவுகணை தொடர்பாக தென்கொரியா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் என தென்கொரிய ராணுவத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
புதிய ஏவுகணை எவ்வளவு தூரம் செல்லக்கூடிய வல்லமை படைத்தது என்பது குறித்தும் தெளிவான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.