இவான்கா ட்ரம்ப்பின் மிடுக்கான ஃபேஷன் சென்ஸ்!

இவான்கா ட்ரம்ப்பின் வருகையால் ஹைதராபாத் நகரம் களைகட்டியுள்ளது. வரலாறு காணாத பாதுகாப்பு, பிரமாண்ட இரவு விருந்து என படுபிஸியாக இருக்கும், இவான்காவின் பன்முகச் செயல் திறன்களைப் பற்றிய தொகுப்பு இது…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மற்றும் முன்னாள் செக் (Czech) / அமெரிக்க மாடல் இவானா இருவருக்கும் பிறந்தவர்தான் இவான்கா. சிறு வயதிலிருந்தே விடுதியில் தங்கிப் படித்த இவான்கா, சொந்தமாகச் சம்பாதிக்க வேண்டும் என முடிவெடுத்து தேர்வுசெய்தது மாடலிங் துறையை. தனது 14-ம் வயதில் மாடலிங் துறைக்கு வந்த இவான்கா, 16-ம் வயதிலேயே அழகிப் போட்டியைத் தொகுத்து வழங்கும் அளவுக்கு முன்னேறினார். எனினும், தன் தந்தையின் ரியல் எஸ்ட்டேட் தொழில்மீது நாட்டம்கொண்ட இவான்கா, வேறு நிறுவனத்தில் இரண்டு வருடங்கள் அதற்கான பயிற்சியை மேற்கொண்டார். முறையான பயிற்சிக்குப் பின்னரே தன் தந்தையுடன் `ட்ரம்ப் அமைப்பில்’ இணைந்து, ரியல் எஸ்டேட் தொழிலில் வரலாறு காணாத லாபத்தை ஈட்டிக்கொடுத்தார்.

இதுமட்டுமல்ல, மாடலிங் அனுபவத்தால் ஆடை வடிவமைப்பாளராகவும் தன்னை அடையாளப்படுத்தினார். இதன் விளைவாக, `இவான்கா ட்ரம்ப்’ எனும் ஆடை தர அடையாளத்தைப் பதித்திருக்கிறார். இதில் ஆண்-பெண் இருவருக்குமான ஆடைகள், உதிரி பாகங்கள், நகைகள், காலணிகள் என அனைத்தும் கிடைக்கும். தன் மகள் வடிவமைத்த உடைகளில் டொனால்டு ட்ரம்ப்பை அதிகம் காணலாம்.

இவான்கா, ஓர் எழுத்தாளரும்கூட. `தி ட்ரம்ப் கார்ட்: பிளேயிங் டு வின் இன் வொர்க் அண்ட் லைஃப் (The Trump Card : Playing to win in work and life)’ எனும் புத்தகத்தை 2009-ம் ஆண்டு வெளியிட்டார். இது அந்த ஆண்டின் அதிகம் விற்பனையான புத்தகங்களுள் ஒன்று. அரசியலையும் விட்டுவைக்கவில்லை இவான்கா. அரசியலில் தடம் பதித்த தன் தந்தைக்கு, அனைத்து வகையிலும் உதவியாளரும் ஆலோசகருமாக இருந்தார். தன் தந்தைக்காக பிரசாரத்தில் ஈடுபட்டார். ட்ரம்ப்பின் வெற்றிக்கு ஒருவகையில் தன் மகளும் காரணம் என்பதனால், `வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகர்’ என மகுடம் சூட்டிக்கொண்டார்.

மாடல், எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர், தொழிலதிபர், அரசியல்வாதி எனப் படபடவெனப் பறக்கும் இவான்கா, தன்னை ஃபேஷன் ஐகானாகவும் பதியவைக்கத் தவறவில்லை. சாதாரணமாக வீட்டில் அணியும் உடைகளிலிருந்து ஓய்வு நாள்கள், விழாக்கள், மாநாடு உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளிலும் இவான்காவின் ஆடைகள் அனைத்தும் அசத்தல் கலெக்‌ஷன். சமீபத்தில் இந்தியா வந்த இவான்கா, கறுப்பு நிற கணுக்கால் அளவுடைய பேன்ட் மற்றும் அழகிய எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் நிறைந்த `பிளேஸர்’ (Blazer) எனப்படும் மேல்சட்டையை அணிந்து `ஸ்மார்ட் லுக்’ தொழிலதிபர் போல காட்சியளித்தார்.

இவான்கா

ஹவர்கிளாஸ் (Hourglass) உடலமைப்பைப் பெற்றிருக்கும் இவான்காவுக்கு அனைத்து வகையான உடைகளும் கட்சிதமாகப் பொருந்தும். அவற்றுள் இணையதளத்தில் `வாவ்’ சொல்லவைத்த சில புகைப்படங்களின் பட்டியல் இதோ.

சமீபத்தில் முடிந்த அமெரிக்காவின் `தேங்க்ஸ் கிவ்விங்’ நாளன்று இவான்கா, பிஸ்தா கிரீன் அச்சிட்ட ஸ்கர்ட் மற்றும் சிவப்பு நிற ஜாக்கெட் அணிந்து தன் மகளுடன் இணைந்து போஸ் கொடுத்த புகைப்படம் டாப்.

இவான்கா Thanksgiving

குயின் மாக்ஸிமாவுடன் இணைந்து இருக்கும் இந்தப் புகைப்படத்தில், இவான்கா `செல்ஃப் பேட்டர்ன் (Self Pattern) பிளேஸர் சூட் (Blazer Suit) அணிந்து, பணியிட உடைக்கு புதிய தோற்றத்தைக் கொடுத்திருப்பார்.

with Queen Maxima

`பெண்களுக்கான இரவு’ எனக் குறிப்பிட்டிருந்த இந்தப் புகைப்படத்தின் தலைப்புக்கு ஏற்ப, அவருக்கே உரித்தான சிவப்பு நிற `ஆஃப் ஷோல்டர் ஃபுல் டிரெஸ் (Off – Shoulder Full Dress )’ அணிந்து இவான்கா அழகிய இளவரசித் தோற்றத்தில் மிளிர்கிறார்.

Holiday

ஃபிட் அண்ட் ஃப்ளார் (Fit and Flare), அதாவது இடையளவு ஆடை அளவொத்திருந்தும், இடைக்குக் கீழ் ஃப்ளீட்களைக் கொண்டு விரிந்த வடிவமைப்பைக்கொண்ட உடையையே அதிகம் தேர்வுசெய்யும் இவான்கா, தனது மகளின் பள்ளி இறுதி நாளன்று எளிமையான கறுப்பு மற்றும் பீச் நிற ஃபிட் அண்ட் ஃப்ளார் உடையில் புன்னகைக்கும் படம் அழகின் உச்சகட்டம்.

with her daughter

இவான்கா, தான் பங்குபெறும் நிகழ்ச்சிகளுக்கேற்ப உரையாடல்களை மட்டுமல்ல, உடைகளையும் நேர்த்தியாகத் தேர்வுசெய்கிறார் என்பது இவரின் செயல்பாடுகளின் மூலம் தெரிகிறது. இவரை முன்மாதிரியாக வைத்து, பல பெண்கள் இவரைப்போல் ஆடைகளை அணிகின்றனர் என்று ஓர் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல திறன்களை உள்ளடக்கியிருக்கும் இவான்காவின் நற்செயல் அனைத்தும் வெற்றியடைய வாழ்த்துகள்.