ரூ.20 கோடி நஷ்டஈடு கேட்டு தொடரப்பட்டு உள்ள மானநஷ்ட வழக்கை சட்டப்படி சந்திப்பேன்: டி.ஐ.ஜி. ரூபா பேட்டி

ரூ.20 கோடி நஷ்டஈடு கேட்டு தொடரப்பட்டு உள்ள மானநஷ்ட வழக்கை சட்டப்படி சந்திப்பேன்: டி.ஐ.ஜி. ரூபா பேட்டி

பெங்களூரு:

“என்னிடம் ரூ.20 கோடி நஷ்டஈடு கேட்டு தொடரப்பட்டு உள்ள மானநஷ்ட வழக்கை சட்டப்படி சந்திப்பேன்” என்று டி.ஐ.ஜி. ரூபா கூறினார்.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2கோடி லஞ்சப்பணம் கைமாறியதாக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தார். இந்த குற்றச்சாட்டுக்கு அப்போதைய சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் ஆளானார்.

இந்த குற்றச்சாட்டை மறுத்த சத்திய நாராயணராவ் டி.ஐ.ஜி. ரூபா மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன் என்று அப்போது அறிவித்தார். இந்த நிலையில் பணி ஓய்வு பெற்ற சத்தியநாராயணராவ் தற்போது பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் ரூபா மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்து உள்ளார். அதன்படி ரூ.20 கோடி நஷ்டஈடு கோரி உள்ளார். இது தொடர்பாக டி.ஐ.ஜி. ரூபாவுக்கு கோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

தற்போது டி.ஐ.ஜி. அந்தஸ்தில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு (பெங்களூரு) பிரிவு கமிஷனராக ரூபா பணியாற்றி வரும் ரூபாவிடம் மானநஷ்ட வழக்கு குறித்து கேட்டபோது கூறியதாவது:-

பரப்பனஅக்ரஹாரா சிறையில் முறைகேடுகள் நடப்பதாக நான் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்ட குழு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சிறையில் முறைகேடுகள் நடப்பதாக வினய்குமார் தகவல்கள் இடம் பெற்று இருப்பதாக கேள்விப்பட்டேன்

ஆனால் ஊழல் தொடர்பான விவரங்கள் அவருடைய அறிக்கையில் இடம்பெறவில்லை. இதை அறிந்து கொண்டதன் மூலம் என்மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்து இருக்கலாம்.

அனைத்து வகையான பணிகளிலும் இதுபோன்ற பிரச்சினை வருவது பொதுவான ஒன்று தான். இதற்கு பயப்பட வேண்டியது இல்லை. இந்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன்.”

இவ்வாறு அவர் கூறினார்.