நெல்லையில் அணி மாற தயாரான அதிமுகவினர்!

தினகரன் ஆதரவாளராக இருந்த எம்.பி விஜிலா சத்தியானந்த் எடப்பாடி அணிக்கு மாறியது குறித்து தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதோடு மேலும் பலர் எடப்பாடி அணிக்கு தாவ தயாராகி வருவதால் நெல்லை அதிமுகவில் உச்ச கட்ட குழப்பம் நிலவி வருகிறது.

தமி்ழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பி.எஸ், சசிகலா அணியினர் இரண்டாகப் பிரிந்ததால் கட்சியும், சின்னமும் முடக்கப்பட்டது.

அதனையடுத்து ஓ.பி.எஸ் -எடப்பாடி அணியினர் ஒன்றாக இணைந்தனர். மேலும் சசிகலா தரப்பு தனி அணியாக செயல்பட்டு வருகிறது.

நீண்ட இழுபறிக்கு பின்னர் தேர்தல் ஆணையம் கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் அணியினருக்கு ஒதுக்கியது.

இதன் காரணமாக தனியாகச் செயல்பட்டு வந்த டி.டி.வி.தினகரன் அணியினர் தற்போது பலர் அணி தாவி வருகின்றனர். ஏற்கனவே தினகரன் அணியிலிருந்த18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

அதோடு ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்து வந்தனர். இந்த நிலையில், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜிலா சத்தியானந்த், நவநீதகிருஷ்ணன் மற்றும் கோகுல கிருஷ்ணன் ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடியை சந்தித்து அவரது முன்னிலையில் ஒருங்கிணைந்த அ.தி.மு.கவில் இணைந்தனர்.

இம்மூவரில் விஜிலா சத்தியானந்த் அணி மாறியது குறித்து தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் அரசு சார்பில் நடைபெற்ற இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பல அரசு நிகழ்ச்சிகளுக்கு அழைக்காமல் விஜிலா சத்தியானந்த் புறக்கணிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

அதோடு இவர் ஏற்கனவே லேப்டாப் வழங்கிய பள்ளியில் எடப்பாடி அணியினர் மீண்டும் புகுந்து லேப்டாப் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் விஜிலா சத்தியானந்திற்கு அரசின் சார்பில் எந்த ஒரு சலுகையும் கொடுக்கப்படாது என்று உள்ளூர் அதிமுகவினர் தெரிவித்து வந்ததாகவும் தெரிகிறது.

எம்.பி பதவி இன்னும் 2 வருடங்களுக்கும் மேல் இருப்பதால் முதல்வர் எடப்பாடி அணியினரை பகைத்துக் கொண்டால் பதவியை தொடர முடியாது என்று கருதி அவர் அணி தாவி விட்டதாக கூறப்படுகிறது.

இது போலவே மேலும் பலர் நெருக்கடியின் காரணமாக அணி தாவ தயாராகி வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.