டிசம்பர் 6ஆம் திகதிவரை கோட்டாபயவை கைது செய்யமுடியாது

 

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான பொதுச் சொத்து மோசடி தொடர்பான விசாரணைகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.

இதன்படி கோட்டாபய ராஜபக்ச மீது எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ஆம் திகதிவரை விசாரணையோ அல்லது கைது நடவடிக்கையோ மேற்கொள்ள முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

gotaதனது தந்தையான டீ.ஏ ராஜபக்சவின் பெயரில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அருங்காட்சியகம் அமைப்பதற்காக அரச நிதியிலிருந்து பெறப்பட்ட 90 மில்லியன் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான நேற்றைய விசாரணையின்போது, தன்னை கைது செய்வதற்கு பொலிஸ் நிதிமோசடிப் பிரிவு முயற்சிப்பதாகவும், அதற்கெதிராக இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பிக்குமாறும் கோரி கோட்டாபய ராஜபக்சவின் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி, ரிட் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்றைய தினம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ஆம் திகதிவரை முன்னாள் பாதுகாப்புச் செயலாளரை கைது செய்வதற்கோ அல்லது அவர் மீதான விசாரணைகளை பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவு முன்னெடுப்பதற்கோ இயலாதபடி இடைக்காலத் தடையுத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்ச கைது செய்யப்படவுள்ளதாக தென்னிலங்கை முழுவதிலும் பரபரப்பான நிலை ஏற்பட்டிருந்த நிலையிலேயே இந்த தீர்ப்பு வெளியாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.