தமிழகம் கோவை மாவட்டத்தில் ஆயுள் தண்டனை கைதி ஒருவர் பிணையில் வெளிவந்தபோது அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பழனிபாபா என்பவர் கடந்த 1997ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையைத் தொடந்து, கோவையில் கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தில் கிருஷ்ணசாமி என்ற ஆசிரியர் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, இந்த வழக்கில் கைதான ரிஸ்வான் பாஷா என்பவர் உள்ளிட்ட மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.கோவை சாய்பாபா கொலனி பகுதியைச் சேர்ந்த ரிஸ்வான் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால், அவருக்கும் இந்தக் கொலைக்கும் சம்பந்தமில்லை என்று, அவரது குடும்பத்தினரும், இஸ்லாமிய அமைப்புகளும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.44 வயதான ரிஸ்வான், பல முறை பிணை கேட்டு விண்ணபித்த போதும் அவரை சிறைத்துறை நிர்வாகம் சிறையில் இருந்து விடுவிக்கவில்லை.இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அவர் 28 நாள்கள் பிணை பெற்று வெளியே வந்துள்ளார். இதைத்தொடர்ந்து, பிணையில் வந்த ரிஸ்வானுக்கு, சமீரா பானு என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.இதுகுறித்து ரிஸ்வானின் தந்தை கூறியதாவது; எங்கள் குடும்பத்திற்கு ரிஸ்வான் ஒரே வாரிசு. அவனுக்கு திருமணம் செய்து வைத்து, அவனுக்காக கட்டிவைத்திருந்த வீட்டினை அவனிடம் எப்படியாவது ஒப்படைத்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். எனது மகன் விரைவில் வெளிவரவேண்டும் என்ற நம்பிக்கை உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.