வேலை செய்த கடையில் திருட்டு பட்டம் சூட்டியதால் 2 குழந்தைகளின் தாய் வி‌ஷம் குடித்து தற்கொலை

அருமனை அருகே, வேலை செய்த கடையில் திருட்டு பட்டம் சூட்டியதால் 2 குழந்தைகளின் தாய் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. இதைத்தொடர்ந்து கடை உரிமையாளர் மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Capturefcvbcfஅருமனை அருகே உள்ள கடையாலுமூடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், பழம் வியாபாரி. இவரது மனைவி வசந்தி (வயது 31). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

குடும்ப வறுமை காரணமாக வசந்தி கடையாலுமூடு பகுதியில் உள்ள ஒரு பேன்சி கடைக்கு வேலைக்கு சென்றார். அந்த கடையின் மேல்தளத்தில் உரிமையாளர் வீடு உள்ளது.

வசந்தி அங்கு வேலைக்கு சேர்ந்த பின்பு, கடையின் உரிமையாளர் அவரை வீட்டில் துணி துவைத்தல், பாத்திரம் கழுவுதல் போன்ற வேலைக்கும் பயன்படுத்தி கொண்டார்.

இதனால், மனமுடைந்த வசந்தி வேலைக்கு செல்ல வேண்டாம் எனக்கருதினார். ஆனாலும், குடும்ப சூழ்நிலையை கருதி வேலைக்கு சென்றார்.

இந்தநிலையில், உரிமையாளரின் மனைவி கடையில் வைத்திருந்த 9 பவுன் நகையை காணவில்லை எனத்தெரிகிறது.

இது பற்றி கடையின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வசந்தியிடம் கேட்டனர். அவர் நகையை திருடவில்லை என்று கூறினார்.

ஆனால் கடையின் உரிமையாளர் இதனை நம்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு பின்பு, சம்பளத்தை வாங்கிவிட்டு வசந்தி வேலைக்கு செல்லவில்லை.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வசந்தியின் கணவருக்கு பேன்சி கடை உரிமையாளரின் மனைவி போன் செய்து பேசினார். அப்போது பேன்சி கடையில் நகை மாயமான விவகாரம் குறித்து கேட்டதோடு, அதில் வசந்தி மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக கூறினார்.

இதனை வசந்தியிடம் அவரது கணவர் கூறினார். இதை கேட்டதும் வசந்தி மனம் உடைந்தார். திருட்டு பட்டம் சூட்டப்பட்டு விட்டதே என்று கணவரிடம் கூறி அழுதார். அத்துடன் மிகுந்த மனவருத்தத்துடன் காணப்பட்டார்.

நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் வசந்தி வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வசந்தி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கடையாலுமூடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து வசந்தியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வசந்தியின் சாவுக்கு காரணம் என்ன? என்று போலீசார் விசாரித்தனர். அப்போது வீட்டில் வசந்தி எழுதி வைத்த ஒரு கடிதம் சிக்கியது.

அதில் அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து உருக்கமான தகவல்களை எழுதி இருந்தார். குறிப்பாக தனக்கு திருட்டு பட்டம் சூட்டியதையும், இதனால் மனம் உடைந்து தற்கொலை செய்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் தனது சாவுக்கு பேன்சி கடையின் உரிமையாளர் மனைவியே காரணம் எனவும் எழுதியிருந்தார். இதையடுத்து போலீசார் அந்த கடிதத்தை கைப்பற்றினர்.

மேலும், தற்கொலைக்கு தூண்டியதாக கடை உரிமையாளர் மனைவி சுபிலா (42) மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.