மட்டக்களப்பு சவுக்கடி தாய், மகன் இரட்டை படுகொலை சம்பவத்துடன் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களின் விளக்கமறியல் 14 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் இருவரும் நேற்று (29) ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது சந்தேக நபர்களை டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
சவுக்கடி பிரதேசத்தில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த நிலையில் 27 வயதுடைய மதுவந்தி பீதாம்பரம் மற்றும் அவரது மகன் 11 வயதுடைய மதுர்சன் ஆகியோர் கடந்த மாதம் 17 ஆம் திகதி நள்ளிரவு தீபாவளி தினத்திற்கு முந்திய நாள் கொள்ளையர்களினால் அடித்துக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஐவர் கைதுசெய்யப்பட்டு மூவர் குற்றமற்றவர்கள் என நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டதுடன், பிரதான சூத்திரதாரிகள் என சந்தேகிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கந்தசாமி புஸ்பராசா மற்றும் சவுக்கடிப் கிராமத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி சகாயராசா சில்வஸ்டர் ஆகியோர் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
சம்பவ இடத்தில் கொள்ளையிட்டு யாழ்ப்பாணத்தில் அடகு வைக்கப்பட்ட 16 பவுண் தங்க நகைகளையும் பொலிஸ் புலனாய்வுப்பிரிவினர் மீட்டிருந்தனர்.