‘பயங்கரவாதத்தில் கவனம் செலுத்துங்கள்’: பிரிட்டன் பிரதமரை சாடிய டிரம்ப்

பிரிட்டன் பிரதமர் தெரீசா மேவுக்கு ட்விட்டரில் அறிவுரை வழங்கிய டிரம்ப்

ட்விட்டரில் தீவிர வலதுசாரி காணொளிகளை அமெரிக்க அதிபர் பகிர்ந்தததை பிரிட்டன் பிரதமர் விமர்சித்ததையடுத்து, பிரிட்டனில் பயங்கரவாதம் மீது கவனம் செலுத்துங்கள் என்று தெரீசா மேவிடம் டிரம்ப் கூறியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ”என் மீது கவனம் செலுத்த வேண்டாம், பிரிட்டனுக்குள் நிகழ்ந்துவரும் அழிவுகரமான தீவிர இஸ்லாமிய பயங்கரவாதத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

முன்னதாக, பிரிட்டனை சேர்ந்த ஒரு தீவிர வலதுசாரி அமைப்பினர் ஆத்திரமூட்டுகின்ற வகையில் இணையத்தில் பதிவேற்றியிருந்த மூன்று காணொளிகளை டொனால்ட் டிரம்ப் தன்னுடைய பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

தெரீசா மேவின் பேச்சாளர் ஒருவர், அதிபர் இவ்வாறு ஆதரவு தெரிவிப்பது மிகவும் தவறு என்று கூறியிருந்தார்.

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இடையே மிகவும் நெருக்கமான உறவு நிலவி வருகிறது. சிறப்பான ஒரு உறவை இருநாடுகளும் கொண்டுள்ளதாக பலரால் அடிக்கடி வர்ணிக்கப்படுகிறது.