மீண்டும் ஒரு மோசமான புயல் தாக்கும் அபாயம்! -அந்தமான் கடலில் மாற்றம்

கன்னியாகுமரி அருகே வங்கக்கடலில் உருவாகிய ‘ஒகி’ புயலைத் தொடர்ந்து மீண்டும் ஒரு பாரிய புயல் தமிழகத்தை தாக்கும் அபாயம் உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

201709102353155410_1_irma-irma._L_styvpf

வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ‘ஒகி’ புயலாக உருமாறியது, இதனால் கன்யாகுமரி பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகி சீரற்ற காலநிலை தொடருகின்றது.

‘ஒகி’ புயலின் எதிரொலியாக தென்தமிழகத்தில் தொடர்ந்து 36 மணித்தியாலயங்களுக்கு கனமழைநீடிக்கும் எனவும் வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தப்புயல் தமிழ்நாட்டின் கடற்கரையினைத் தாக்காது, அரபிகடல் நோக்கி நகர்ந்து செல்வதால் இது தொடர்பாக மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. எனினும் புயலின் தாக்கம் அதிகரித்தவாறே காணப்படுகின்றது.

இந்தநிலையில் அந்தமான் கடல்பகுதிக்கு அருகில் இன்று காலை புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது எதிர்வரும் 3ஆம் திகதி வலுவடைந்து புயல் சின்னமாக மாறும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த காற்றழுத்தம் புயலாக மாறுமிடத்து தமிழகத்தின் கரையோரப்பகுதிகளுக்கு கடுமையான சேதங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் ‘ஒகி’ புயலை விடவும் மோசமான பாதிப்புகளை இந்தப்புயல் ஏற்படுத்தக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.