உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர்

கேரளாவை சேர்ந்த 24 வயதான ஹாதியா ஜஹான் தான் மணம் புரிந்து கொண்டவரை அவரது பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாததுடன் அவரை “வீட்டுக் காவலிலும்” அடைத்தனர்.

மதம் மாறுவதற்கு முன்பு ஹதியாவின் பெயர் அகிலா அசோகன்

ஹாதியா ஜஹான் ஓர் இந்து குடும்பத்தில் பிறந்தார். ஆனால் இஸ்லாமிற்கு மதம் மாறி ஒரு முஸ்லிம் இளைஞரை மணந்தார்.

இந்து பெண்கள் முஸ்லிம் ஆண்களைத் திருமணம் செய்து கொள்வதும், முஸ்லிம் பெண்கள் இந்து ஆண்களைத் திருமணம் செய்வதும் இந்தியாவில் பல காலமாக நடந்து வருகிறது.

இரண்டு வகைத் திருமணங்களிலும், பெண்களின் குடும்பங்கள் பெரும்பாலும் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கின்றன. ஆனால், தங்களை எளிதாக வழிக்கு கொண்டுவரமுடியாது என்பதை பெண்களும் நிரூபித்துக் கொண்டுதான் வருகிறார்கள்.

கடுமையான புகுந்த வீடு, பழக்கமில்லாத சமூகம் ஆகியவற்றில் தங்களை இணைத்துக் கொள்ளவேண்டி இருந்தாலும், தங்களுக்கு பழக்கமான சூழலை விட்டு வெளியேற வேண்டியிருந்தாலும் அவர்கள் தாங்கள் காதலிக்கும் நபரின் மீதுள்ள நம்பிக்கையில் ஒரு முடிவை எடுத்துவிட்டு எதிர்ப்பையும் மீறி உறுதியாக நிற்கிறார்கள்.

பெண்ணின் குடும்பத்தினரின் வன்முறைத் தாக்குதலில் இருந்து தப்பிக்க நகரை விட்டு வெளியேறிய ஒரு காதல் ஜோடியிடம் நான் பேசினேன். அவர்களில் ஆண் இந்து, பெண் முஸ்லிம்.

இரண்டு குடும்பங்களும் அவர்களது முடிவை முழுமையாக எதிர்த்தனர். ஆனால் திருமணம் ஏற்கனவே நடந்துவிட்டது என்று கூறினால் அந்த ஆணின் குடும்பம் தங்களை ஏற்றுக்கொள்ளும் என்று அவர்கள் நினைத்தார்கள்.

இம்முடிவில் ஆபத்துக்கள் இருந்தபோதிலும், அவர்கள் வெவ்வேறு மதங்களின் ஆண் மற்றும் பெண் இடையே நடக்கும் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் ‘சிறப்பு திருமணங்கள் சட்டத்தின் கீழ் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டதுடன் அந்த ஆணின் குடும்பத்தின் முன் போய் நின்றார்கள்.

ஆனால், இதே நிலைப்பாடு அந்த பெண்ணுக்கு பொருந்துவதில்லை. “அதுபோன்று எங்கள் முடிவுகளை அறிவிக்க முடியாது மற்றும் எங்களுக்கு எது சிறந்தது என்று நாங்கள் முடிவு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை” என்று அவர் என்னிடம் கூறினார்.

அவர்கள் ஒன்று சேர்ந்து வாழ்வதை நிறுத்துவதற்கு ‘எந்த அளவிற்கும்’ செல்ல அவரது குடும்பம் தயாராக இருந்தது. அதனால், அடுத்த நாளே அவர்கள் சொந்த ஊரில் இருந்து ஓடிவிட்டார்கள்.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, அந்த பெண்ணின் குடும்பம் அவருடன் பேசக் கூட மறுத்துவிட்டது.

அப்பெண்ணின் தந்தை நீண்டகாலமாக நோயுற்று இருந்ததை அவர் இறந்த பின்னரே தெரிவித்தனர்.

“நான் எதற்கும் வருத்தப்படமாட்டேன். ஆனால், திருமணம் குறித்து ஒரு தன்னிச்சையான முடிவை நான் எடுத்தபோது என் பெற்றோர் என் மீது நம்பிக்கை கொள்ளாதிருந்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இதில் மோசமான விடயம் என்னவென்றால், என் தந்தை நான் எனது நிலையை விளக்குவதற்குரிய வாய்ப்பைக்கூடத் தரவில்லை” என்று அவர் கூறுகிறார்.

பெண்கள் கத்துகிறார்கள், பெற்றோர்கள் கேட்கிறார்களா?

முடிவெடுக்கப் போதிய வயதோ அனுபவமோ இல்லை என்பதால் இந்த எதிர்ப்பு எழுவதில்லை. மாறாக சமூகத்தில் ‘அவமானம்’ என்பது பற்றி நிலவும் கருத்தினாலும் கட்டுப்பாடு கைவிட்டுப்போவது குறித்த கவலையினாலுமே இந்த எதிர்ப்புகள் எழுகின்றன.

வேறொரு நிகழ்வில் முஸ்லிம் மதத்தை சார்ந்த ஆண் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள முஸ்லிம் பெண் ஒருவர் 10 ஆண்டுகள் காத்திருந்தார்.

அவர்களுக்குள் காதல் மலர்ந்தபோது அந்தப் பெண் வேலை செய்து கை நிறைய சம்பாதித்துக்கொண்டிருந்தார். ஆனாலும் அவரது காதல் எதிர்ப்புக்குள்ளானது.

இது ஒரு சதி என்றும், அந்த நபரைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்றால் அந்தப் பெண் மதம் மாற வேண்டுமென்றும், அதனால் சொந்த மதத்தை இழக்கநேரிடும் என்று அவளுடைய பெற்றோர் அவரிடம் சொன்னார்கள்.

“இது காதல் ஜிஹாத் இல்லை! நான் மூளைச் சலவை செய்யப்படவில்லை, என் வயதொத்த பிறரைப் போலவே, நானும் காதலிக்கிறேன்” என அவர் என்னிடம் கூறினார்.

ஆனால் அதைப் புரிந்து கொள்ள அவரின் பெற்றோருக்கு 10 ஆண்டுகள் ஆயின.

அவர்கள் அப்பெண்ணைச் சார்ந்து இருப்பதால் மட்டுமே அவரிடம் மீண்டும் வந்தார்கள். வயோதிகத்தில் நோய்வாய்ப்பட்டதால், அவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவுவதற்கு ஆரம்பித்ததுடன் குடும்பத்தையும் ஏற்று நடத்த ஆரம்பித்தார்.

ஒரு கட்டத்திற்குப் பிறகு அவர்களால் மகள் மீது கட்டுப்பாடு செலுத்த முடியவில்லை.

காதலில் விழுந்து ஒரு பத்தாண்டுகளுக்குப் பின் அந்தப் பெண் தன் இதயம் சொன்னதைச் செய்தார்.

“என் தீர்வு குறித்து நான் உறுதியாக இருந்தேன். எனக்காக அவர் காத்திருக்க தேவையில்லை என்றும் அவர் ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியும் எனவும், என் பெற்றோர் இதற்கு இறுதியாக ஒப்புக் கொண்டால் நான் அவரின் இரண்டாவது மனைவியாக இருக்கிறேன் என்றும் அவரிடம் கூறினேன். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டதுடன், பெண்கள் ஆண்களால் மேய்க்கப்படும் ஆடுகள் போலல்ல என்பதை தான் நம்புவதால் பொறுத்திருப்பேன் என்று அவர் கூறினார்” என்று அவள் கூறினாள்.

ஹாதியாவுக்கு ஏற்பட்டது ஒரு கடுமையான அனுபவம்.

கணவர் ஷஃபின் ஜஹானுடன் ஹாதியா

தனது திருமணத்திற்குப் பிறகு தன் பெற்றோர் சில மாதங்கள் வீட்டுக்குள்ளேயே முடக்கிவிட்டதாகவும் மற்றும் அவளுடைய கணவர் உச்சநீதிமன்றத்தை அணுகவில்லை என்றால் அவளுடைய அண்மைய விடுதலை சாத்தியமானதல்ல என்றும் அவர் கூறுகிறார்.

ஹாதியாவின் திருமணம் இன்னும் பல கேள்விகளுடனே இருக்கிறது.

ஹாதியாவின் முடிவை அவரது தந்தை நிராகரித்து அதை “லவ் ஜிஹாத்” என்று கூறியதுடன், அது ஐ.எஸ் அமைப்பில் சேர்வதற்கு சிரியாவுக்கு அனுப்பி வைக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டியதை கேரள உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

இது குறித்த வழக்கில் வரும் ஜனவரி மாததிற்கு பின் உச்ச நீதிமன்றம் முடிவு செய்யவிருக்கிறது.

ஆனால், நீதிமன்றத்தின் வெளியேயும், உள்ளேயும், ஹாதியா உரத்த குரலுடன், தெளிவாக இருந்துள்ளார்.

“நான் முஸ்லிமாக இருக்கிறேன். என்னுடைய சொந்த விருப்பத்தினால்தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். என்னை முஸ்லிமாக யாரும் கட்டாயப்படுத்தவில்லை. எனக்கு நீதி தேவை, என் கணவருடன் வாழ விரும்புகிறேன்” என்று ஊடகங்களின் கேமராக்களின் முன் அறிவித்தார்.

மற்ற துணிச்சலான பெண்களைப் போலவே, தனது தேர்வு பற்றி தெளிவான கருத்துடையவர். எனது தேர்வானது குறையுள்ளதாகவோ அல்லது தவறானதாகவோ மாறலாம். ஆனால், ஆண்கள் அனுமதிக்கப்படுவதைப் போன்று வீழவும், எனக்கு நானே விடயங்களை கற்கவும் விடுங்கள்.