டெல்லியில் பிரபல ஆங்கில பத்திரிகையின் தலைமைத்துவ மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பங்கேற்று பேசினார். அப்போது அவர், “மேம்பட்ட இந்தியாவை உருவாக்குவதற்கு நான் எடுத்த நடவடிக்கைகளுக்காக, நான் தேர்ந்தெடுத்த பாதைக்காக அரசியல் ரீதியாக ஒரு விலை கொடுக்க வேண்டியது இருக்கிறது. இதை நான் அறிந்துள்ளேன். இதற்கு நான் என்ன விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்.
உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது நாட்டின் நடத்தையிலேயே ஒரு மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. சுதந்திரத்துக்கு பின்னர் முதல்முறையாக, நாட்டில் சட்ட விரோதமாக பணத்தை குவித்த ஊழல்வாதிகள் பயம் அடைந்துள்ளனர்.
கருப்பு பணம், வங்கிகளுக்கு வந்துள்ளது. அது மிகப்பெரிய புள்ளி விவரங்களை புதையலாக கொண்டு வந்திருக்கிறது. இது தவறான புள்ளிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு வழி வகுத்துள்ளது. சட்டத்துக்கு புறம்பான வழிகளில் திரட்டப்பட்ட சொத்துகள், இணை பொருளாதாரத்துக்கு நிதி அளித்தது. இப்போது அது முறைசார் பொருளாதாரத்துக்கு மாறி உள்ளது.” என பேசினார்.
முன்னதாக, பணமதிப்பிழப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் அரசியல் தளத்தில் பல அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.