ஜெயலலிதா உயிரோடு இருந்த போதும் சரி, இறந்த பின்னும் சரி அவருக்கு குழந்தை இருந்ததா? இல்லையா? என்பது குறித்த புரளிகளுக்குப் பஞ்சமே இருந்ததில்லை.
தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலின் போதும் , பிரச்சாரங்களில் எதிர்கட்சியினரால் ‘ஜெயலலிதாவுக்கு குழந்தை இருப்பது’ குறித்த வதந்திகள் மிகக் கீழ்த்தரமாகப் மக்கள் மத்தியில் பரப்பப்படும்.
அந்த வதந்திகளுக்கு எல்லாம் ஜெயலலிதா உயிருடன் இருந்தது வரை தான் ஆயுள் என்று நினைத்தால். தற்போது அவர் இறந்த பின்னும் கூட எதை முன்னிட்டு அந்த வதந்திகள் மறு ஆக்கம் பெறுகின்றன எனில், ஒரு பக்கம் வாரிசற்றுக் கொட்டிக் கிடக்கும் ஜெயலலிதாவின் கோடிக்கணக்கான ரூபாய்கள் பெறுமானமுள்ள சொத்துக்கள் மறுபுறம் ஜெயலலிதாவின் மகள் என்பதால் மட்டுமே தமிழக அரசியலில் கிடைத்து விடப்போவதாக எதிர்பார்க்கும் பிரகாசமான அரசியல் எதிர்காலங்கள்… அனுகூலங்கள் இவையெல்லாமும் தான்.
1996 ஆம் ஆண்டிற்குப் பின்னான காலகட்டங்களில் ஜெயலலிதா குறித்து பிரபல தமிழ் புலனாய்வு வாரமிருமுறை இதழ் ஒன்று வெளியிட்ட செய்திக் குறிப்பொன்றில் ஜெயலலிதாவைப் போலவே முகச்சாயலிருந்த இளவரசியைக் கூட ‘இவர் தான் ஜெயலலிதாவின் வாரிசு’ என்று அட்டைப்படத்தில் கட்டம் கட்டி புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தார்கள்.
ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த காலகட்டத்திலும் ‘இவர் தான் ஜெயலலிதாவின் மகள்’ என அமெரிக்காவில் கணவர், குழந்தைகளுடன் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பெண்மணியின் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்குள்ளும் கிலி பரப்பிய பெருமை தமிழ் வாட்ஸ் அப் வட்டாரங்களுக்கே உரியது.
கடைசியில் அந்தப் பெண்மணியின் உறவினர் ஒருவர் இந்தியாவில் இருப்பவர்; இது சாட்ஷாத் என்னுடைய அண்ணி, அவருக்கும் ஜெயலலிதாவுக்கும் ஸ்நானப் ப்ராப்தி கூட இல்லை என்று மன்றாடாத குறையாக அறிவித்த பிறகு தான் தற்போது அந்த வதந்தி ஓய்ந்திருக்கிறது.
அது மட்டுமா? ஜெயலலிதா, 70 களில் குமுதத்துக்கு அளித்த பேட்டியில், தான் தெலுங்கு நடிகர் ஷோபன் பாபுவுடன் ‘லிவிங் டுகெதர்’ முறையில் இணைந்து வாழ்வதாகப் பதில் அளித்ததால்… நிச்சயம் அவர்களுக்கு குழந்தை இருந்தே தீர வேண்டும் என்று கங்கனம் கட்டிக் கொண்டு தேடி அலைகிறது ஒரு கூட்டம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தன் தாய் ஷைலஜாவுடன் ஜெயலலிதாவைச் சந்திக்க அனுமதி கேட்டு அது கிடைக்காத பட்சத்தில் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த இதே அம்ருதா எனும் பெண்… அப்போது ஜெவைத் தனது பெரியம்மா எனச் சொந்தம் கொண்டாடினார்.
அவரது தாயார் ஷைலஜாவோ… இன்னும் ஒரு படி மேலே சென்று; தன்னை ஜெயலலிதாவின் உடன் பிறந்த தங்கை எனக் கூறி இருந்தார் அந்த நேர்காணலில்.
ஜெயலலிதாவின் அம்மா சந்தியாவுக்கு கடைசியாகப் பிறந்த பெண் குழந்தை தான், தான் எனவும், அப்போது சந்தியாவுக்குப் பட வாய்ப்புகள் குறைந்து அவர் சிரமதசையில் இருந்ததால் தன்னை வளர்க்க முடியாமல் ஒரு பிரபலத் தயாரிப்பாளரிடம் வளர்ப்பு மகளாகத் தத்துக் கொடுத்து விட்டார் என்றும் கூறியிருந்தார்.
பின்னர் தனது வளர்ப்புத்தந்தை சொல்லித்தான் சந்தியா தனது தாயார் என்ற விவரம் தனக்குத் தெரிய வந்ததாகவும், விஷயமறிந்து தாயைக் காண வந்த தன்னிடம் அம்மா சந்தியா… தூரத்தில் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்த ஜெயலலிதாவைக் காட்டி இவள் உன் அக்கா, இப்போது சினிமாவில் அவளுக்கு நிறைய வாய்ப்புகள் வருவதால் உன்னை என்னால் மகள் என அறிவிக்க முடியாது எனக்கூறி வளர்ப்புத்தந்தையுடன் திருப்பி அனுப்பியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதில் எது உண்மை?
இந்த அம்ருதாவின் அம்மா தன்னை ஜெயலலிதாவின் உடன்பிறந்த தங்கை என்றார் அப்போது; இப்போது ஷைலஜாவும் உயிருடன் இல்லை.
ஜெ இறப்பதற்கு முன்பே அவரும் உடல்நலக்குறைவால் இறந்து விட்டதாகத் தகவல். அந்த வதந்திக்கே மூலம் காண முடியாத போது; ஜெயலலிதா இறந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து இப்போது வந்து தன்னை ஜெயலலிதாவின் மகள் என உரிமை கொண்டாடுவது வேடிக்கையாக இருந்தாலும் அதை வதந்தி எனப் புறம் தள்ளி விடவும் முடியாத அளவுக்கு ஜெயலலிதாவின் வாழ்க்கை ரகசியம் குழப்பத்தில் ஆழ்த்துகிறது.
2012 ஆம் ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புறநகர்ப் பகுதி ஒன்றில் பங்களா ஒன்றை எடுத்துத் தனியே தங்கி; அங்கிருந்த மக்களையும், காவல்துறையையும் ஏமாற்றி மோசடி வேலைகளில் ஈடுபட்டுவந்த பிரியா மகாலட்சுமி எனும் பெண், தன்னையும் ஜெயலலிதாவின் மகள் எனக் கூறிக் கொண்டார்.
இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை அஞ்சியதைப் பற்றிக் கூட அப்போதைய தமிழ் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன.
இது குறித்து அன்று உயிருடன் இருந்த ஜெயலலிதாவின் ரியாக்ஷன் என்னவாக இருந்தது என்பதைப் பற்றித் தெரியவில்லை.
ஆனால் அதே பெண், ஜெயலலிதா இறந்த சூட்டோடு சூடாக கடந்த ஆண்டும் தன்னை ஜெயலலிதாவுக்கும், எம்ஜிஆருக்கும் பிறந்த மகளாக தன்னைத்தானே அறிவித்துக் கொண்டு ஊடகங்களுக்கு பேட்டியெல்லாம் கொடுத்து பரபரப்புக் கிளப்பினார். பிறகு காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டது தனிக்கதை.
ஜெயலலிதா மறைவை ஒட்டி பழம்பெரும் நடிகைகளான வாணிஸ்ரீ, ஷீலா, சச்சு, சரோஜாதேவி, உள்ளிட்டோர் நடிகைகள் ஊடகங்களில் அவரது நினைவுகளைப் போற்றிப் பேசுகையில். அந்நாளைய அவரது நெருங்கிய தோழியாகக் கருதப்பட்ட நடிகை ஷீலா, தெரிவித்த விஷயத்தை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
‘ஜெயலலிதா வேதா நிலையத்துக்கு குடி வந்த புதிதில் அவரது அண்ணன் ஜெயக்குமார் குடும்பத்தினர் அவருடன் இணைந்தே குடியிருந்து வந்தனர்.
அப்போது ஜெயக்குமாரின் மகளான தீபா, அந்த வீட்டில் தான் பிறந்தார். தீபாவை ஜெயலலிதா வீட்டுக்கு வெளியில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருப்பதைக் கண்ட இரண்டாம் தர செய்தி சேகரிப்பாளர்கள் சிலர், அந்தக் குழந்தை ஜெ வுக்குப் பிறந்த குழந்தை என வதந்தி பரப்பி விட்டனர். அப்படி ஒரு விஷயம் ஜெயலலிதா வாழ்வில் நிகழ சாத்தியமே இல்லை’.
– என ஷீலா குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், இப்போது பெங்களூரைச் சேர்ந்த மறைந்த ஷைலஜாவின் மகள் அம்ருதா, தன்னை ஜெயலலிதாவுக்கும், ஷோபன் பாபுவுக்கும் பிறந்த மகளென உரிமை கோரி டி.என்.ஏ சோதனைக்கு உத்தரவிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடியிருப்பது மிகுந்த ஆச்சர்யத்தைக் கிளறுகிறது.
மெரினாவில் புதைக்கப்பட்ட ஜெ வின் சமாதியைத் தோண்ட தமிழகத்தின் தற்போதைய அரசியல் அதிகார மையம் அனுமதிக்குமா? சோதனை நடந்தால் அல்லவோ தெரிய வரும் நிஜமாஜகவே இந்தப் பெண், ஜெயலலிதாவின் மகள் தானா? இல்லையா? என்பது!
தற்போது அம்ருதாவின் உரிமை கோரல் வழக்கை விசாரிக்கும் பொறுப்பு கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் வாரிசு குறித்த வதந்திகளுக்கு நீதிமன்றத்தின் வாயிலாக ஒரு முடிவு கட்டப்படாவிட்டால், நாளை சிவப்பாக சுண்டினால் ரத்தம் தெறிக்கக்கூடிய நிறத்தில் புஷ்டியாக இருக்கும் பெண்கள் யார் வேண்டுமானாலும் ‘நான் தான் ஜெயலலிதாவின் மகள்’ என உரிமைக்குரல் எழுப்பத் துணியலாம்.