இலங்கையில் சீரற்ற வானிலை – 55,855 பேர் பாதிப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக 55 ஆயிரத்து 855 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் பாதிப்பு

14 ஆயிரத்து 617 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது. 30 பேர் காயமடைந்துள்ளதுடன், 8 பேர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

430 வீடுகள் முற்றாகவும், 11,597 வீடுகள் பகுதி அளவும் சேதமடைந்துள்ளன. சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிலையங்கள் 82 இந்த சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,

901 குடும்பங்களைச் சேர்ந்த 3,279 பேர், 28 தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் தென்மேற்கு பகுதியில் நிலைக் கொண்ட தாழ்வழுத்தம் காரணமாக நேற்று முன்தினம் இரவு கடும் காற்றுடன் கடும் மழை பெய்ததால் இந்த பாதிப்புக்கள் ஏற்பட்டிருந்தன.

மழை வெள்ளம்

இந்த தாழ்வழுத்தம் அரபிக் கடலை நோக்கி நகர்ந்துள்ளதுடன், தற்போது அது சூறாவளியாக மாற்றமடைந்துள்ளது.

இலங்கையிலிருந்து சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் இந்த சூறாவளியினால், நாட்டில் பல பகுதிகளுக்கு இன்றும் கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி எஸ்.சூரியகுமாரன் தெரிவித்தார்.

மேல், சப்ரகமுவ, தென், ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று மழையுடன் கூடிய வானிலை நிலவும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அணையில் வெள்ளப்பெருக்கு

இதேவேளை, பதுளை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மழை பெய்யும் பகுதிகளில் உள்ள மக்கள் மிகுந்த கவனமுடன் செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.