அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பிரபல ஆங்கில ஊடகமான இந்துஸ்தான் டைம்ஸ் நடத்தும் தலைமையாளர்கள் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக நேற்று புதுடெல்லி வந்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒபாமா, தனது அதிபர் பதவி காலத்தில் இருமுறை இந்தியாவுக்கு வந்ததை நினைவு கூர்ந்தார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியா மிகப்பெரிய முஸ்லிம் மக்கள் தொகை ஒருங்கிணைந்த நாடு. இங்குள்ள முஸ்லிம்கள் தங்களை இந்தியர்களாகக் கருதக்கூடியவர்கள். இது துரதிர்ஷ்டவசமாக மற்ற நாடுகளில் கைகூடுவதில்லை.
இப்படி இந்தியர்களாக தங்களை அறிவித்துக் கொண்ட முஸ்லிம்களை இந்தியா பராமரித்து, செழிப்பூட்ட வேண்டும். எனவேதான் இந்தியா அத்தகைய முஸ்லிம் மக்களை ஆதரித்து பேணி வளர்க்க வேண்டும் என்று கூறுகிறேன். எப்போதும் இதனை நடைமுறைப்படுத்த முனைப்புக் காட்ட வேண்டியது அவசியம் என்று உணர்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதிபர் பராக் ஒபாமா 2009 முதல் 2017 வரை அமெரிக்காவின் 44-வது அதிபராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.