”உலகத் தமிழர்களுக்காக தமிழ் வளர் மையங்கள்..!” அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்பு

‘இந்திக்கு பிராசார சபா இருப்பது போல் தமிழர்கள் பரவியுள்ள நாடுகளில் முதற்கட்டமாக 1 லட்சத்துக்கும் மேல் தமிழர்கள் வாழும் 17 நாடுகளில் தமிழ் வளர் மையங்கள் அமைக்கப்படும் எனவும், இதற்கான முனைப்பு பணிகளில் தமிழ்நாடு அரசு தற்போது ஈடுபட்டு வருகிறது” என்றும் அமைச்சர் பாண்டிய ராஜன் தெரிவித்தார்.

pandi_01577

தென்ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில், நான்காவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் டர்பன் அரசர் ஸ்வெதிலினி, மொரிஷியஸ் நாட்டின் துணை அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளின் தமிழ் அமைப்புகள், வர்த்தக அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பாண்டியராஜன்

தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தமிழக அரசின் சார்பில் கலந்துக் கொண்டு பேசுகையில், ” எம்.ஜி.ஆர் தனது திரைப்படப்பாடலில் ‘உழைக்கும் கைகளே, உருவாக்கும் கைகளே, உலகைப் புதுமுறையில் உண்டாக்கும் கைகளே..’ எனப் பாடியது போல், தென் ஆப்பிரிக்காவின் டர்பன் பகுதிக்கு 1860 ஆம் ஆண்டுகளில் கப்பல்களில் வருகைத்தந்த தமிழ் மக்கள் வைரச்சுரங்கம், கரும்பு பயிர் செய்தல் போன்ற தொழில்களில் தங்கள் உதிரம் சிந்தி உழைத்து, இந்த நாட்டை வளமாக்க உறுதுணையாக பாடுபட்ட தமிழர்கள் வாழும் இம்மண்ணில் நடைபெறும் 4-வது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் பங்கற்பதில் பெருமையடைகிறேன்.

இன்று உலகில் உள்ள 155 நாடுகளில் 9.81 கோடி தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அயல் நாடுகளில் வசிக்கும் இந்தியர்களில் 52 சதவீதம் தமிழர்களே என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தமிழர்களுக்காக தனியே ஒரு மூலதன அமைப்பு தொடங்கப்பட வேண்டும்; அதற்கு இந்த மாநாடு தொடக்கமாக அமைய வேண்டும்.

 

இந்திக்கு பிராச்சார சபா இருப்பது போல், முதற்கட்டமாக 1 லட்சத்துக்கும் மேல் தமிழர்கள் வாழும் 17 நாடுகளில் தமிழ் வளர் மையங்கள் அமைக்கப்படும். இதற்கான முனைப்பு பணிகளில் தமிழ்நாடு அரசு தற்போது ஈடுபட்டு வருகிறது. அதுபோலவே, தமிழர்களின் கலை பண்புகளை மேம்படுத்தும் வகையில் தமிழ்க் கலைகளை பயிற்றுவிக்கும் தமிழ் பண்பாட்டு மையங்கள் ஏற்படுத்தப்படும். மேற்கத்திய இசை முறைக்கு கிரேடிங் முறை இருப்பது போன்று தென்னக இசை முறைக்கும் கிரேடிங் முறை ஏற்படுத்தப்படும்” என்றார்.

மாநாட்டில் தமிழக அரசின், கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் அர்ச்சனா நாராயண மூர்த்தி, கலைமாமணி திவ்யா கஸ்தூரி ஆகியோரின் பரதநாட்டியம் நிகழ்ச்சியும் மற்றும் திருமருகல் சகோதரர்களின் வயலினிசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.