இலங்கையின் கல்கமுவ பகுதியில் “தல பூட்டுவா” என செல்ல பெயர் கொண்டு அழைக்கப்படும் மிக அரிய வகை தந்தம் கொண்ட யானையை கொன்ற குற்றச்சாட்டின் கீழ் ஐவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட இரண்டு பொலீஸ் குழுக்களினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகிறது.
கல்கமுவ தல பூட்டுவா என அழைக்கப்படும் இந்த யானை கடந்த சில நாட்களாக காணாமல் போயிருந்ததைத் தொடர்ந்து பிரதேச மக்கள் பாதுகாப்பு பிரிவினருக்கும், வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கும் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், யானையொன்றின் தந்தங்கள் இரண்டை விற்பனை செய்யச் சென்ற இருவர் கடந்த 23-ம் தேதி வலானை ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்படுகின்றனர்.
பொல்பித்திகம பிரதேச செயலாளர் அலுவலகத்தில் கடமையாற்றும் கிராம சேவகர் மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் குறிப்பிட்டனர்.
தல பூட்டுவா என அழைக்கப்படும் யானையின் தந்தத்தை ஒத்ததான இரண்டு தந்தங்களும் கடந்த 23ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வசமிருந்து கைப்பற்றப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், சூழலியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த யானையைத் தேட ஆரம்பித்திருந்தனர்.
இவ்வாறு நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது தல பூட்டுவா என அழைக்கப்படும் யானையின் உடலுக்கு ஒத்ததான உடலொன்று பஹல்ல பல்லேகெலே வனப் பகுதியிலிருந்து கடந்த 29ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த யானையின் உடல் முழுமையாக உருக்குலைந்திருந்த நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இது சுமார் மூன்று வாரங்கள் முன்பு இறந்திருக்கலாம் என்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
அதன்பின்னர் யானையின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு கடும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதுடன், நேற்று (30) பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டிருந்தது.
இவ்வாறு இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட யானையானது, தல பூட்டுவா என செல்லமாக அழைக்கப்படும் யானை என்பது சாட்சியங்களுடன் வனஜீவராசி திணைக்களத்தின் வனவிலங்கு வைத்திய பணிப்பாளர் தாரக பிரசாத் உறுதிப்படுத்தியுள்ளார்.
45 வயதான இந்த யானையின் பல இடங்களில் குறிப்பாக தலை மற்றும் தொண்டை பகுதியில் சுட்டதால் இந்த யானை இறந்துள்ளதாக பிரேதப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த பின்னணியில், சம்பவம் தொடர்பில் இதுவரை 7 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகிறது.
கொல்லப்பட்டதன் பின்னர் இந்த யானையின் உடல் பாகங்களை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஆயுதங்களையும், யானையைக் கொல்லப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் துப்பாக்கியையும் போலீசார் மீட்டுள்ளனர்.
குறிப்பாக இந்த யானைகள் 60 முதல் 70 ஆண்டுகள் இந்த காட்டுப் பகுதியில் வாழக்கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.
தந்தங்கள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பதே இந்த யானையின் விசேட அம்சமாகும்.
இவ்வாறான அரிய வகை யானைகள் இரண்டு அல்லது மூன்று மாத்திரமே இலங்கையில் காணப்படுவதாக அரசாங்க தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதேவேளை, இலங்கையில் கடந்த காலங்களில் காட்டு யானைகள் கொல்லப்படுவது குறித்து விசாரணையை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு, சட்டம் , ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காட்டு யானைகளைக் கொன்று அதன் தந்தங்களை விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பதில் போலீஸ் மாஅதிபர், சிரேஷ்ட பிரதி போலீஸ் மாஅதிபர் சீ.டி.விக்ரமரத்னவிற்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
பிற செய்திகள்