இரு பிள்ளைகளின் தாய் மீது 14 தடவைகள் துப்பாகிப் பிரயோகம்!

கொட்டாவ பொலிஸ் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் நேற்றுமுன்தினம் இரவு 8.40 மணியளவில் இனந்தெரியாதோரால் வீடு புகுந்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக கொட்டாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுமித்த கருணாரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, உயிரிழந்த பெண் விளக்கமறியலில் இருந்து விடுதலையாகி வந்தபின்னர் பல இடங்களில் தலைமறைவாகியிருந்த நிலையில் அண்மையில் பிள்ளைகளும் கணவரும் தங்கியிருந்த வீட்டுக் சென்றிருந்த போது இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

625.500.560.350.160.300.053.800.900.160.90 (8)கொட்டாவ, பாலிகா குடியிருப்பு வீதி, ருக்மலே, பன்னிப்பிட்டியவை சேர்ந்த 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரான மஞ்சுளா சந்துனி என்ற பெண்ணே இவ்வாறு இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை இரவு 8.40 மணியளவில் கொட்டாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ருக்மலே பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் துப்பாக்கிப் பிரயோகச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதாக 119 அவரச உதவி சேவை பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, கொட்டாவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் அந்த இடத்தை நோக்கி செல்ல பணிக்கப்பட்டுள்ளனர்.

கொட்டாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்புரைக்கமைய உடனடியாக அப்பிரதேசத்திற்கு விரைந்து சென்ற கொட்டாவ பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கொலையுண்ட இடத்திலிருந்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இக்கொலைச் சம்பவம் இடம்பெற்ற இடத்திலேயே பொலிஸாரின் பலத்த பாதுகாவலின் மத்தியில் கொலையுண்ட பெண்ணின் சடலம் நேற்று வியாழக்கிழமை இரவு முழுவதும் வைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை கொலையுண்ட பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளும் இடம்பெற்றன.

இவ்விசாரணைகளின் போது தெரியவருவதாவது, கொலையுண்ட பெண் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த வேளையில் குறித்த பெண்ணை நோக்கி முழுமையாக முகத்தை மூடிய கறுப்பு நிற தலைக்கவசம் அணிந்திருந்த மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு சந்தேக நபர்கள், துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தின் போது கொலையுண்ட பெண்ணின் மார்பில் முதல் துப்பாக்கி ரவை பதியப்பட்டு பெண் மயங்கி சரிந்த வேளையில், தொடர்ந்து பெண்ணை நோக்கி 14 முறை துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு இனந்தெரியாத மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.

கொலையிடம் பெற்ற வேளையில் கொலையுண்ட பெண்ணின் மாமியார் மாத்திரமே வீட்டில் இருந்ததாகவும் குறித்த பெண்ணின் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளும் குறித்த சம்பவத்தின் போது அருகிலிருக்கவில்லை எனவும் தெரியவருகின்றது.

குடும்ப தகராறு ஒன்றின் காரணமாக குறித்த பெண் கணவனை விட்டு பிரிந்து இருப்பதாகவும் தனது குழந்தைகளை பார்க்க மாத்திரமே இவர் வந்து செல்வதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் கொலையுண்ட பெண் அத்துறுகிரிய பிரதேசத்தில் அழகுநிலையமொன்றின் உரிமையாளர் எனவும் அந்த அழகு நிலையத்தில் கடந்த பெப்ரவரி மாதம் பாதாள உலக கோஷ்யுடன் சம்பந்தப்பட்ட டனில் பண்டார தர்மசேன என்ற 33 வயதுடைய நபரை சுட்டுக்கொண்ட சம்பவத்துடன் இவர் தொடர்புடையவர் என்பதும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

அந்த துப்பாக்கி பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய கொலையாளிகளுக்கு தகவல் வழங்கிய குற்றச்செய்திக்காக கடந்த ஆறுமாத காலம் சிறையிலிருந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே இவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பிணையில் வந்த இவருக்கு மரண அச்சுறுத்தல் இருந்ததால் பல்வேறு இடங்களில் வசித்து வந்துள்ள நிலையில், கடுவல நீதிமன்றில் நடைபெறும் வழக்கு விசாரணைகளுக்கு சமுகமளித்து விட்டு கணவர் மற்றும் குழந்தைகள் தங்கியிருந்த வீட்டுக்கு வந்த நேரத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், இச்சம்பவம் தொடர்பாக இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. நேற்று சம்பவம் நடைபெற்ற இடத்தை_ஹோமாகம நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி பார்வையிட்டதுடன் மேலதிக விசாரணைகளை கொட்டாவ மிரியான மற்றும் நாகமுவ பிரதேச பொலிஸாரை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி மேலதிக விசாரணைகளை கொட்டாவ, மிரியான மற்றும் நாகமுவ பொலிஸார் மேற்கொள்கின்றனர்.