59 ஆண்டுகளாகியும், அணைக்க முடியாத நெருப்புக் குழிகள்…

அந்த இடத்திற்கு நீங்கள் எந்தச் சூழலில் சென்றாலும், எந்த நேரத்தில் சென்றாலும், எந்த மாதத்தில் சென்றாலும் அது அப்படியே தான் இருக்கும். அதனால் கற்பனையை நீங்கள் எந்த நேரத்திற்கு வேண்டுமானாலும் பொருத்திக் கொள்ளுங்கள். வெயிலோ, மழையோ, குளிரோ, பகலோ, வெளிச்சமோ… உங்களுக்குப் பிடித்த சூழலோடு பொருத்திக் கொண்டு தொடர்ந்து படியுங்கள்…

57465015_18360சுற்றிலும் பசுமை போர்த்திய வயல்வெளி. நடுவே இது வறண்ட நிலம். அந்த வெடிப்பு கலந்த நிலத்தின் நிறம் சாம்பலும், கருப்பும் கலந்த மாதிரியாக இருந்தது. சரியாக அளவிட்டால் அது அந்த மொத்த நிலத்தில்  4 சதுர மீட்டர் துண்டு பகுதி அது. அதில் அங்கொன்றும், இங்கொன்றுமாக சின்ன, சின்ன குழிகளில் நெருப்பு எரிந்துக் கொண்டிருக்கிறது. கணக்கிட்டுப் பார்த்தால்…1…2…3… மொத்தம் 7 அல்லது 8 நெருப்புக் குழிகள் இருக்கும்.

59 ஆண்டுகள் தொடர்ந்து எரியும் நெருப்பு – சீனா

கையில் ஒரு கருப்பு நிற கெட்டிலோடு (Kettle)  நடந்து வருகிறார் அந்தப் பெரியவர். அவரின் வயது நிச்சயம் 75வது இருக்கும்.  காலைக் கொஞ்சம் அகட்டி நடந்தாலும் நல்ல திடகாத்திரமாகத் தானிருக்கிறார். கிட்டத்தட்ட “தி கராத்தே கிட்” படத்தில் வரும் ஜாக்கிசான் போன்று இருக்கிறார். அந்தக் கெட்டிலை ஒரு நெருப்புக் குழியின் மீது வைக்கிறார். நேராக குழியில் இல்லை… குழி மீது கற்களை அடுக்கி சிறு அடுப்பு போல் உருவாக்கிவிட்டு அதன் மீது அந்தக் கெட்டிலை வைக்கிறார். ஐந்து நிமிடங்களுக்கும் குறைவான நேரம் தான். அந்த தண்ணீர் கொதிக்கத் தொடங்கிவிடுகிறது.

சூடாக இருக்கும் அதன் தலையில், தன் பேன்ட் பாக்கெட்டிலிருக்கும் துணியை எடுத்துப் பிடிக்கிறார். பின்னர், வந்த வழியே திரும்பி நடக்கத் தொடங்கிறார். நடை அப்படியே தானிருக்கிறது.

59 ஆண்டுகள் தொடர்ந்து எரியும் நெருப்பு – சீனா

இது சீனாவின் தென்மேற்குப் பகுதியிலிருக்கும் சாங்கிங் (Chongqing) பகுதி. இங்கு பற்றி எரிந்துக் கொண்டிருக்கும் அந்த நெருப்பு கடந்த 59 வருடங்களாக அணையாமல் தொடர்ந்து எரிந்துக் கொண்டிருக்கிறது.

1958யில் இந்தப் பகுதியில் எண்ணெய் எடுப்பதற்காக ஒரு கிணற்றைத் தோண்டுகிறார்கள். ஆனால், அங்கு அவர்கள் நினைத்தளவிற்கான வளங்கள் இல்லை என்பதால் அதை சரிவர மூடாமல் அப்படியே விட்டுப் போகிறார்கள். அப்போது எரியத் தொடங்கிய  இந்த நெருப்புக் குழிகள் இத்தனை ஆண்டுகள் கழித்தும், இன்னும் அணையாமல் எரிந்துக் கொண்டேயிருக்கின்றன.

பூமியிலிருந்து தொடர்ந்து அணையாமல் நெருப்பு எரிந்துக் கொண்டேயிருக்கும் நிகழ்வுகள் உலகின் சில  பகுதிகளிலும் கூட  நடந்திருக்கின்றன. நடக்கின்றன. சில இயற்கையாக நடக்கின்றன, சில மனிதர்களின் தவறுகளால் ஏற்படுத்தப்படுகின்றன. தமிழகத்தின் நெடுவாசலை ஒட்டியிருக்கும் கோட்டைக்காடு கிராமத்திலும் கூட, ஓஎன்ஜிசி அமைத்த ஒரு குழாயிலிருந்து தொடர்ந்து ஒரு மாதம் நெருப்பு பற்றி எரிந்தது.

59 ஆண்டுகள் தொடர்ந்து எரியும் நெருப்பு – சீனா

மின்னல் தாக்கிய நிலம் பிளவுபட்டு எரிவது, சுரங்கங்களின் காரணத்தால் எரிவது, இன்னும் மனிதன் ஏற்படுத்தும் சில காரணங்கள் என, இப்படியான தொடர் நெருப்பு சம்பவங்கள் நடக்கின்றன. இது போன்ற விஷயங்களுக்கு முக்கிய காரணம், பூமியின் கீழ் இருக்கும் நிலக்கரி போன்றவை ஆக்ஸிஜனோடு இணையும் போது அது “தீ”யாக மாறுவது தான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

சாங்கிங் பகுதியில் எரிந்துக் கொண்டிருக்கும் இந்த நெருப்பில் ஒரு நாளைக்கு இரண்டு வேளை, தண்ணீரை சூடு செய்வதை சம்பிரதாயமாகக் கொண்டிருக்கிறார்கள் இந்தப் பகுதி மக்கள். சமையலுக்கு விறகு கிடைக்காத சமயங்களில் அந்த  நெருப்பில் வந்து சமைப்பதையும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். ஆனால், மக்கள் செய்யும் இந்தப் பழக்கங்கள் ஆபத்தானவை என எச்சரிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

59 ஆண்டுகள் தொடர்ந்து எரியும் நெருப்பு – சீனா

எரியும் இந்த நெருப்பை அணைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் எதுவும் இதுவரை முழுப் பலனை தரவில்லை. தண்ணீர் ஊற்றினால் அணைகிறது.ஆனால், அடுத்த மூன்று நிமிடங்களுக்குள்ளாகவே மீண்டும் பற்றிய எரியத் தொடங்கிவிடுகிறது.

இந்த நிலை இன்னும் நீண்டகாலம் இப்படியே தொடர்ந்தால், நிலத்தின் அடுக்குகளில் சரிவு ஏற்பட்டு அந்தப் பகுதியில் மிகப் பெரிய குழிகள் (Sink Holes) ஏற்படலாம். அந்தப் பகுதியிலிருக்கும் கட்டடங்கள் இடிந்து விழலாம் எனவும் எச்சரிக்கிறார்கள். ஆனால், இதை முற்றிலுமாக அணைப்பதற்கான வழி என்னவென்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை…