ஆர்.கே.நகர் தொகுதியில் அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப்பேரவை என்ற அமைப்பின் தலைவர் பாபு புதிய கெட்டப்புடன் வந்ததை பார்த்து மக்கள் அதிர்ந்து போனார்கள். பாபுவை காவல்துறையினர் அழைத்துச்சென்று விசாரித்து வருகின்றனர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து இடைத்தேர்தல் ரத்துசெய்யப்பட்டது. இதனிடையே, டிசம்பர் இறுதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருதுகணேஷ், சசிகலா அணி சார்பில் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் உள்ளிட்டோர் தேர்தலில் போட்டியிட உள்ளனர். எம்.ஜி.ஆர் ஜெயலலிதா தீபா பேரவை சார்பில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தே.மு.தி.க. த.மா.கா, பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துவிட்டன. தி.மு.க வேட்பாளருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். இவர் தாக்கல்செய்த 184-வது வேட்பு மனு இது. மேலும் சுயேச்சையாக வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு கே.பாபு என்பவர் இன்று வித்தியாசமான கெட்டப்பில் வந்தார். இந்த கெட்டப்பைப் பார்த்து ஆர்.கே.நகர் மக்கள் அதிர்ந்து போனார்கள். சிறைச்சாலையில் இருப்பதுபோல் வேடமிட்டு வந்த அவரை போலீஸார் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். அவருடன் வந்தவர்களின் கைகளில் “ஓட்டுப்போடும் மக்களை ஏமாற்றாதே, லஞ்சம் ஊழலை ஒழிக்காமல் விடமாட்டோம்” போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகள் இருந்தன. இதனால் அந்தப் பகுதியில் சில நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அவரை காவல்துறையில் தண்டையார்பேட்டை காவல் நிலைத்துக்கு அழைத்துச்சென்றனர். ”வாக்காளர்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்காகவே இப்படி வந்தேன்” என்று பாபு தெரிவித்தார். அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப்பேரவை என்ற அமைப்பை பாபு நடத்திவருவதாக அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.