தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களில் பெரும் கனமழை தாக்க இருப்பதாகவும், இதனால் சென்னை மாநகரம் முழுவதுமே தண்ணீரில் மூழ்க இருப்பதாகவும் ஒரு தகவல் வாட்ஸ்ஆப்பில் பரவி வந்தது.
இதனை தொடர்ந்து பலரும் தமிழக வெதர்மேன் என்று பெருமையுடன் அழைக்கப்படும் மழை மனிதர் பிரதீப் ஜானிடம் ‘நான் என்ன செய்வது, பேசாமல் ஊரை காலி செய்து விட்டு சொந்த ஊருக்கே போய்விடவா..? என்று கேட்டு வந்தனர்.
வதந்திகளும், பரபரப்பும் அதிகமாகவே நேற்று இந்த பிரச்சனை குறித்து அவர் விளக்கமாக பதிலளித்து இருந்தார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
ஒரு மொக்கை சாரல்மழைக்கு, நான் ஒரு மொக்கை பதிவு போட்டு இருக்கிறேன். புயல்வந்தால், முன்கூட்டியே நான் அறிவிப்பு செய்யமாட்டேனா..?
புயலுக்கு பிந்திய ஈரப்பதம் காரணமாக, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை பகுதிகளில் இன்னும் மழை பெய்யக்கூடும்.
ஆதலால், இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு நல்லமழை கிடைக்கும். நீலகிரி குன்னூர் மலைப்பகுதியிலும் மழை இருக்கும்.
தயவு செய்து புரளியை, வதந்திகளை நம்பாதீர்கள். புதிய புயல் ஆந்திராவுக்கா, நமக்கா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை.
அடுத்துவரும் நாட்களில் கனமழை வர இருப்பதாக ஊடகங்களில் செய்திவெளியாகிறது, சென்னையை விட்டு சென்றுவிடவா என்றெல்லாம் என்னிடம் கேட்கிறார்கள் இதெல்லாம் ஓவர் பில்டப்…
அடுத்த 4 நாட்களுக்கு அப்படி ஏதும் நடக்காது. அமைதியாக தூங்குங்கள். நான் இருக்கிறேன், மழை, புயல் குறித்து உங்களுக்கு அறிவிப்பு செய்யாமல், போகமாட்டேன்.
பதிவிடாமல் இருக்கமாட்டேன். ஒரே ஓரு வேண்டுகோள், யாரும் தயவு செய்து வதந்திகளை பரப்பாதீர்கள். சும்மா பீதியை கிளப்பாதீங்க’ என்று கூறி இருக்கிறார்.
மேலும், அடுத்த புயல் உருவாகும் பட்சத்தில் முன்கூட்டியே இவர் கணித்து வெளியிட இருப்பதாக கூறி இருக்கிறார்.
வானிலை முன்னறிவிப்பு மையத்தின் தகவலை விட இவரின் கணிப்பு நம்பக தன்மை வாய்ந்ததாகவும், துல்லியமாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.