சென்னை: ஆர்.கே.நகரில் நடிகர் விஷால் ஏன் சுயேட்சையாக போட்டியிட உள்ளார் என்று சில சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கமல் சார்பில் விஷால் ஆர்கே நகர் இடைதேர்தலில் களம் இறங்கலாம் என்று சொல்லப்பட்ட நிலையில் இப்போது தனித்து போட்டி என்று செய்திகள் வருகின்றன.
இதன் பின்னணியை ஆராய்ந்தோம். கமலுக்கும் விஷாலுக்கும் உரசல் ஆரம்பித்துள்ளதாக செய்திகள் தகவல் தெரிய வந்திருக்கிறது.
கமலும் விஷாலும் நெருக்கமாக இருந்ததும் நடிகர் சங்க அறங்காவலர் குழுவில் கமலுக்கு கௌரவ பொறுப்பு கொடுத்ததும் எல்லோரும் அறிந்ததே…
கமல் பேச்சை கேட்டு தான் விஷால் நடக்கிறார் என்றும் கமல் கட்சி ஆரம்பிக்க விஷால் உதவி செய்யப்போகிறார் என்றும் தகவல் வந்தது.
ஆனால் தற்போதைய நிலவரப்படி கமலும் விஷாலும் எதிரெதிராக நிற்கிறார்களாம்.
கமல் ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி விஸ்வரூபம் 2, சபாஷ் நாயுடு இரண்டு படங்களிலும் சில நாட்கள் படப்பிடிப்பு மீதம் இருந்தது. சில இழுபறிகளால் கமல் நடித்துக் கொடுக்க காலம் தாழ்த்தவே இரண்டு தயாரிப்பாளர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர்.
விஷால் நடவடிக்கை எடுக்க மாட்டார் இருந்தாலும் கொடுத்து பார்ப்போமே என்று சங்கத்தில் புகார் கொடுத்தனர். கமலுக்கு காலில் ஆபரேஷன் என்று சொல்லி ஓய்வில் இருந்ததால் விஷால் பொறுமையாக இருந்தார்.
ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதியில் இந்தியன் 2 படத்தின் அறிவிப்பு வரவே டென்ஷனாகி விட்டாராம். உடனே கமலிடம் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை முடித்துக் கொடுத்து விட்டு இந்தியன் 2 தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம் விஷால். இதன் விளைவாகத் தான் இந்தியன் 2 படத்தை தயாரிக்க இருந்த தில்ராஜு வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.
அரசியலில் தனித்தனி
விஷால் கோரிக்கையை ஏற்று கமல், இரண்டு படங்களையும் முடித்துக் கொடுப்பதாக சொல்லி விஸ்வரூபம் 2 படப்பிடிப்பிலும் ஈடுபட்டுள்ளார்.
ஆனால் அரசியலில் விஷாலுடன் கைகோர்ப்பதில்லை என்ற முடிவுக்கும் வந்துவிட்டாராம். இந்த சிறு உரசல் காரணமாக, கமலுக்கு முன்னதாகவே விஷால் களம் இறங்கத் தான் ஆர்கே நகரில் நிற்கிறார் என்கிறார்கள். விஷாலுக்கு செம தில் தான் போங்க என்று பாராட்டுகிறார்கள் தயாரிப்பாளர்கள்.