மன்னார் – ஆண்டாங்குளம் பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் குடும்பஸ்தரொருவர் 37 நாட்களின் பின் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த குடும்பஸ்தரின் சடலம் நேற்றைய தினம்(01) மாலை மடு காட்டுப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் ஆண்டாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை சன் நீக்கிலாஸ் (வயது 56) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மன்னார் ஆண்டாங்குளம் சந்தியில் முடி திருத்தகம் (சலூன்) நடத்தி வரும் குறித்த குடும்பஸ்தரை கடந்த 25.10.2017 அன்று மாலை 4 மணி முதல் காணவில்லை என அவரது மனைவி அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில் அடம்பன் பொலிஸார் மற்றும் காணாமல் போனவரின் உறவினர்கள் குறித்த குடும்பஸ்தரை நீண்ட நாட்கள் தேடியும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, மடு பூ மலந்தான் கிராம அலுவலகர் பிரிவுக்கு உட்பட்ட மடு 3ஆம் கட்டை காட்டு பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சடலத்தை பார்வையிட்ட காணாமல் போன குடும்பஸ்தரின் உறவினர்கள், சடலமாக மீட்கப்பட்டவர் காணாமல் போன ஆண்டாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை சன் நீக்கிலாஸ் என்பதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், கிராம அலுவலகர் மற்றும் விசேட தடவியில் நிபுணத்துவ பொலிஸார் ஆகியோர் சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு வந்து சடலத்தை பார்வையிட்டுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.