மாணவ, மாணவியர் தற்கொலை: யார் குற்றம்? தீர்வு என்ன?

(பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் தற்கொலை தொடர்பான செய்திகள் சமீப காலத்தில் அடிக்கடி காணப்படும் நிலையில், அதற்கான அடிப்படைக் காரணத்தை ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கம். இதில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். இது பிபிசியின் கருத்துக்கள் அல்ல– ஆசிரியர்)

மாணவ, மாணவியர் தற்கொலை: யார் குற்றம்? தீர்வு என்ன?

அண்மைக் காலமாக நம் கவனத்திற்கு வரும் பதின்பருவ தற்கொலைகள் அனைத்துமே பள்ளி, கல்லூரி மாணவர்களுடையதாகவே இருக்கின்றனவே, ஏன் என்று யோசித்தோமா?

காதல் தோல்வியினாலோ, தீடீர் மனச்சோர்வு காரணமாகவோ, குடும்ப சூழல் காரணமாகவோ இத்தனை தற்கொலைகள் நடந்திருக்கவில்லை. தனித்தனியாகவும், கூட்டாகவும் இந்த இளசுகள் இறந்திருப்பது, தங்கள் ஆசிரியர்களின் கடுமையான நடவடிக்கை தாள மாட்டாமல்தான் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன.

சிலர் சொல்கிறார்கள், “ஆசிரியர்கள் என்றால் திட்டக் கூடாதா? கொஞ்சம் சுடுசொல் சகிக்க முடியாமல் இருப்பது அந்த மாணவர்கள் குறைதான், ரொம்பவும் செல்லம் கொடுத்து கெடுத்து வைப்பதே பெற்றோர்தான்.” என்று. இந்த மூன்று வாக்கியங்களையுமே நாம் கூர்ந்து கவனிப்போமே….

திட்டுவது ஆசிரியர்களின் உரிமையா?

அப்படித்தான் பெற்றோர்களே கூட இன்னமும் நம்புகிறார்கள். “எவ்வளவு வேண்ணா அடிங்க, திட்டுங்க, ஆனா மதிப்பெண் வாங்க வையுங்க” என்று சொல்லியே பள்ளிகளில் தம்மக்களை சேர்பிக்கும் பெற்றோர் இன்னமும் இருக்கிறார்கள். அடியாத மாடு படியாது, என்று நம்பும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் இவர்கள் இருவருமே மறப்பது ஒன்றைத்தான். மாட்டைக் கூட இன்று அடிப்பது சட்ட விரோதம். வளர்ந்த மனிதர்களுக்கு என்று சில உரிமைகள் இருப்பது போலவே, குழந்தைகளுக்கும், பதின்பருவத்தினருக்கும் மனித உரிமைகள் உண்டு. அவர்களுக்கு நன்மை விளைவிப்பதற்காக கூட அந்த உரிமைகளை மீறக் கூடாது.

மாணவ, மாணவியர் தற்கொலை: யார் குற்றம்? தீர்வு என்ன?

சிலருக்கு படிப்பு வரும், சிலருக்கு வராது. சிலருக்கு சில பாடங்கள் இயல்பாகவே மூளைக்கு பிடிக்கும், சிலருக்குப் பிடிக்காது. அது அவரவர் மூளை அமைப்பை பொறுத்தது. சிலருக்கு நிதானமாய்தான் புரியும், சிலருக்கு சட்டென புரிந்துவிடும். இதை வைத்து, “படிக்குற பசங்க, படிக்காத பசங்க” என்று பிரித்து பார்ப்பதே அசிங்கம்.

இன்று நமக்கிருக்கும் இனணைய தள வேகத்திற்கும் வசதிக்கும், குழந்தைகள் வீட்டில் தன் கம்ப்யூட்டரை பார்த்தே பாடம் கற்றுக்கொள்ள முடியும். இருந்தும் குழந்தைகளை நாம் இன்னமும் ஏன் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புகிறோம்? ஏட்டு பாடத்தை கம்ப்யூட்டர் கூட கற்பிக்கும், ஆனால் மற்ற மனிதர்களோடு பழகும் மக்கட்பண்பு என்கிற அந்த மென்கலையை கற்க, முப்பது நாற்பது சக மாணவர்கள், ஆறேழு ஆசிரியர்கள், நண்பர்கள் எதிர்கள் என்கிற செட்டு சேர்ப்புகள் எல்லாம் இருந்தால்தானே முடியும்? இன்று ஒவ்வொரு வீட்டிற்கு ஒன்றிரண்டு குழந்தைகள் மட்டுமே இருக்கும் சூழலில் இந்த மக்கட்பண்பை கற்றுக்கொள்ளத்தான் குழந்தைகள் முக்கியமாக பள்ளிக்கூடங்களுக்கு போவதே. அதை விட்டு விட்டு வெறுமனே மதிப்பெண் வேட்டையாக கல்வியை மாற்றியிருப்பது இலக்கை மறந்த பயணம்.

பதின்பருவ மாணவ மனநிலை

குழந்தைகள் எல்லோருமே ஒரே தன்மையினராய் இருப்பதில்லை. Readiness to learn எனப்படும் கற்றல் தயார் நிலையில் மாறுதல்கள் இருக்கும். அதை அனுசரித்து, “சரி இப்போது உனக்கு இது புரியாவிட்டால் பரவாயில்லை, பிறகு உன் மூளை இதை கற்கும் தன்மைக்கு வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் விடு” என்று கல்வியை இலகுவாக்குவது அவசியம்.

பெற்றோரும், ஆசிரியர்களும், “நல்லா நாக்கை பிடிங்கிக்கிறா மாதிரி நாலு வார்த்தை கேட்டா, புத்தி வருதானு பார்க்கலாம்”, என்று நினைத்து, பலர் எதிரிலும், குழந்தைகளை அவமானப்படுத்தி பேசுகிறார்கள்- நாக்கை பிடுங்குதல் என்பதே தற்கொலை செய்து கொள்ளுதல் என்று கூட அர்த்தம் புரியாமல்!

இப்படி அவமானப்படுத்துதல் கற்றலை அதிகரிக்குமா என்பது பற்றி பல ஆராய்சிகள நடந்துள்ளன. அத்தனை ஆராய்ச்சிகளும் சொல்வது ஒன்றே தான்: Shame – அவமானம் கற்றலை பாதிக்கிறது, Pride – பெருமை கற்றலை அதிகரிக்கிறது. அதனால் குழந்தைகளை குறைசொல்லி, மற்றவரோடு ஒப்பிட்டு மட்டம் தட்டாமல், அவர்களுக்கு எதில் ஆற்றல் உள்ளதோ, அதையே ஆரம்பப் புள்ளியாய் வைத்து, பாராட்டி, ஊக்குவித்தால், படிப்படியாக மாணவர்கள் கற்றலில் ஆற்றல் பெறுவார்கள்.

மாணவ, மாணவியர் தற்கொலை: யார் குற்றம்? தீர்வு என்ன?

மாணவர்களுக்கு the fun in learningகே இல்லாமல் வெறுமனே “எக்சாம்ல கேட்பாங்க, அதனால் மனப்பாடம் பண்ணணும்” என்ற மனப்பான்மையை ஏற்படுத்துவதும் படிப்பின் போதையை குறைத்துவிடுகிறது.

கல்வி என்பது ஒரு மிகப் பெரிய போதை, அதனால்தான் அதை எப்போதுமே பேரின்பம் என்கிறோம். ஒரு புதிய கருத்தை உள்வாங்கும் போதும், ஒரு புது கண்டுபிடிப்பை செய்யும் போதும், ஆயிரம் உச்சங்களுக்குண்டான ஆனந்தத்தை மூளை பெறுகிறது.

கல்வியும் கலவியும் கிட்டத்தட்ட ஒரே அணுகுமுறையை கையாண்டால்தான் ரசிக்க முடியும். இலகுவாய் பேசி, ஆவலை தூண்டி, `அய் நாமும் பங்கேற்கலாமே’ என்கிற ஆசையை தூண்டி, பிறகு, நெளிவு சுளிவுகளை சொல்லிக் கொடுத்தால், மாணவர்களுக்கு அந்தப் பாடத்தின் மேல் காதலே கூட வந்துவிடுவதுண்டு.

ஆனால் இப்படி எல்லாம் அந்த மாணவரை அணுக வேண்டும் என்றால் அந்த ஆசிரியருக்கு தன் பாடத்தின் மீது காதல் இருக்க வேண்டும், மாணவரின் மீது அன்பும் மதிப்பும் இருக்க வேண்டும், தன் பணியின் மீது அக்கறை இருக்க வேண்டும். சும்மாவேணும் கூலிக்கு மாரடிப்பது போல வந்து கத்திவிட்டு போவதும், தன் இயலாமையினால் மாணவர்களை வாய்க்கு வந்தபடி பேசுவதும் ஆசிரியர் பணிக்கு அழகே ஆகாது.

பதின்பருவ மாற்றங்கள்

பன்னிரெண்டு வயது வரை குழந்தயைத் திட்டினாலும் அடித்தாலும், அடுத்த நிமிடம் மறந்துவிட்டு ஓடிவரும் மனப்பான்மை, பதின் பருவத்தில் தொடருவதில்லை. காரணம், இந்த வயது குழந்தைகளுக்கு பாலியல் ஹார்மோன்கள் மிக அதிகமாக அளவிலும் வீச்சிலும் சிரந்து, அதுவரை குழந்தையாய் இருந்த உடலையும் மூளையையும், முதிர்ச்சிக்கு தயார்படுத்துகிறது.

மாணவ, மாணவியர் தற்கொலை: யார் குற்றம்? தீர்வு என்ன?

 

இந்த ஹார்மோன்கள் அவர்களை உணர்ச்சிப்பிளம்பாக்கி விடுகின்றன. இந்த வயது குழந்தைகள் அனைவருக்குமே தங்கள் குடும்பம், உருவம், படிப்பு, சமூக மதிப்பு, மாதிரியான பல விஷயங்களை முன்னிட்டு, தாழ்வு மனப்பான்மை இருப்பதுண்டு. நாம் யார்? நமக்கு வருமா? நாம் தேருவோமா? நம்மை மதிப்பார்களா? ஏற்பார்களா? என்று தினம் தினம் ஆயிரம் இன்செக்யூரிட்டியோடு மோதும் மனதுடன், அவர்கள் பாடத்திலும் கவனம் செலுத்துவது அவர்களைப் பொருத்தவரை அலுப்பான காரியம். இப்படி தமக்குள்ளே போராடி, களைத்த பிள்ளைகளை புரிதலோடு கையாளாமல், மார்க் வாங்கும் இயந்திரங்களை போல கையாள்வது நாம் அவர்களுக்கு செய்கிற துரோகம்.

பெற்றோரின் அணுகுமுறை

செல்ஃபோனை பயன்படுத்தாதே, நண்பர்களோடு அரட்டை அடிக்காதே, பகல் கனவு காணாதே என்று மாணவர்களுக்கு பல அறிவுறைகளை கூறும் பெற்றோரும், முதலில் தொலைக்காட்சி மோகத்தை விட்டு வெளியேற வேண்டும். குழந்தைகளோடு மனம் விட்டு பேச நேரம் ஒதுக்கி, படிப்பு அல்லாத பிற விஷயங்களை பற்றியும் பேசி, “நீ நல்லா வருவே, உன்னை நான் அவ்வளவு நேசிக்கிறேன், நான் சந்தித்த பிரச்சனைகள் இது இது, நம் வம்சாவழியினரின் பிழைப்பு கதை இது…..இத்தனை போராட்டங்களை மீறி வென்று வந்தவர்கள் நாம்…உனக்கும் அதே ஆற்றல் இருக்கு. எதுனாலும் சமாளிக்கலாம், விடு” என்று பந்தம், பாசம், நம்பிக்கை, வாழ்ந்தே தீருவது என்கிற ஊக்கம்…இதை எல்லாம் வீட்டில்தான் விளைத்தாக வேண்டும்.

கலாசார ரீதியாகவே நமக்கு ஒரு கோளாறு இருக்கிறது, “மானம் தான் முக்கியம், உயிர் போனால் போகுது” என்கிற நம்பிக்கையை நாம் தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். அது பிழைப்பிற்கு எதிரானது. மானம் போனால் பரவாயில்லை, அடுத்த பரிட்சையில் பார்த்துக்கலாம், உயிர் போனால் திரும்ப வராது, உயிர்தான் முக்கியம் என்கிற புரிதல் நம் அனைவருக்குமே வேண்டும்.