குற்ற வழக்குகள் எண்ணிக்கையில் தமிழகத்தின் இடம் என்ன?

இந்தியாவில் 2016 ஆம் ஆண்டுக்கான குற்ற வழக்குகள் குறித்த புள்ளி விவர அறிக்கையை தேசிய குற்றப் பதிவேடுகள் அமைப்பு வெளியிட்டுள்ளது. எந்தெந்த மாநிலங்களில் அதிக குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? இதில் தமிழ்நாட்டின் நிலை என்ன?

தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் கைது செய்யப்பட்டதை அடுத்து வட இந்தியாவில் மூண்ட வன்முறை.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக நிகழ்ந்த குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் என அனைத்து பிரிவுகளின் பட்டியலும் வெளியாகியுள்ளது.

இந்தியளவில் ஒட்டு மொத்தமாக பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளின் எண்ணிக்கை முந்திய ஆண்டைக் காட்டிலும் 2.6 சதவீதம் அதிகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், அதிக குற்ற வழக்குகள் பதியப்பட்ட மாநிலங்களில் உத்திர பிரதேசம் முதலிடத்தை பிடித்துள்ளது.

மேலும், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், பீகார், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களும் பல்வேறு குற்றப்பிரிவுகளில் முதல் மூன்று இடங்களில் உள்ளன.

தமிழ்நாட்டின் நிலை என்ன?

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் அதிகம் பதிவு செய்யப்பட்ட மாநிலம் உத்திர பிரதேசம். இதில், தமிழகம் 19வது இடத்தை பெற்றுள்ளது. பெருநகரங்கள் பட்டியலில் இதில் சென்னைக்கு 16வது இடம். இதே போன்று பெரும்பாலான குற்றப்பிரிவுகள் எதிலும் முதல் மூன்று இடங்களில் தமிழகம் இல்லை.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை அடுத்து போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட சம்பவங்களின்போது கொளுத்தப்பட்ட தமது வீட்டைப் பார்த்து ஓலமிடும் ஒரு பெண்மணி.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி திலகவதி, “தமிழகத்தில் அதிகளவில் காவல்துறையினர் இருப்பது இதற்கு காரணமாக இருக்கலாம்” என்று தெரிவித்தார். ஆனால், அதேசமயம் இங்கு காவல்துறையினர் மீது மக்களுக்கு பயம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

குற்றங்கள் குறித்த நல்ல விழிப்புணர்வு தமிழக மக்களுக்கு உள்ளது எனக் கூறிய அவர், எந்த குற்றங்களாக இருந்தாலும் அதை டி.ஜி.பிக்கு வாட்ஸ் ஆப் மூலம் கூட புகார் தெரிவிக்கும் வசதியும் இங்குள்ளது என்றார்.

தீண்டாமைக்கு எதிரான திராவிட இயக்கங்கள்

“தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் இல்லவே இல்லை என்று கூறிவிட முடியாது. ஆனால், மற்ற சில மாநிலங்களைவிட ஜாதி வேற்றுமையும், தீண்டாமையும் இங்கு குறைந்து காணப்படுவதற்கு திராவிட இயக்கங்கள் ஒரு முக்கிய காரணம்” என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்க, வேற்றுமையும் தீண்டாமையும் குறைந்து வருவதால் இது போன்ற குற்றங்கள் வட மாநிலங்களைவிட தமிழகத்தில் குறைந்துள்ளதாக திலகவதி தெரிவித்தார்.

கடத்திச் செல்லப்பட்டு மீட்கப்பட்ட தமிழகத்தின் பழங்கால சிலைகள்

எனினும், இந்த புள்ளிவிவரங்கள் ஒட்டு மொத்த உண்மைகளையும் பிரதிபலிக்காது என்றும், களஆய்வு இல்லாததால் இதுதான் நிஜம் என்று கருதிவிட முடியாது என்றும் அவர் கூறினார்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்

குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குப் பட்டியலில் தமிழகம் 15வது இடத்தில் உள்ளது.

“குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து தமிழகத்தில் நல்ல விழிப்புணர்வு உள்ளது” என குழந்தைகள் நல அமைப்பின் உறுப்பினர் ஷீலா சார்ல்ஸ் மோகன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

சிறிய குற்றங்களாக இருந்தாலும், அதுகுறித்து தங்களுக்கு தகுந்த தகவல்களை மக்கள் தருவதாக குறிப்பிட்ட அவர், குழந்தை பாதுகாப்பு மையங்களும் விரைந்து செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

சிறுகுற்ற வழக்குகளில் சென்னை முதலிடம்

சூதாட்டம், மதுவிலக்கு, வனம் சம்பந்தமான சிறு குற்ற வழக்குகள் சென்னையில் அதிகளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வகை வழக்குகளில் பெருநகரங்களில் பதிவு செய்யப்பட்டவற்றில் சென்னையில் 32.9 சதவீதமும், அதனைத் தொடர்ந்து கொச்சியில் 12.9 சதவீதமும் பதிவாகியுள்ளது.