ஒரு லிட்டர் ஆட்டுப்பால் 1000 ரூபாய். இது இந்தியாவில்!

ஆட்டுப்பால்

பட்னாவின் கங்கட்பாஹ் என்ற இடத்தில் இருக்கும் குடிசைப் பகுதிகளில் விற்கப்படும் ஆட்டுப்பாலை வாங்க வந்திருக்கிறார் ஷ்யாம். இவருடைய 15 வயது மகன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

”சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு என் மகனுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சல் சரியாகிவிட்டாலும், அவன் மிகவும் சோர்வாக இருப்பதால் மூன்று வாரங்களாக தொடர்ந்து தினமும் 250 மி.லி. ஆட்டுப்பால் கொடுத்துவருகிறேன்”.

ஆட்டுப்பால் உடலுக்கு நல்லது என்ற ஆலோசனையை ஷ்யாமிடம் மருத்துவர் சொன்னாரா? இல்லை, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆட்டுப்பால் கொடுப்பது நல்லது என்று சிலர் சொல்கிறார்கள்.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பட்னாவின் சில இடங்களில் டெங்குக் காய்ச்சல் தீவிரமாக பரவியது. அதன்பிறகு ஆட்டுப்பாலின் விலை கிடுகிடுவென்று அதிகரித்துவிட்டது.

பட்னாவின் துஸாத்பக்ரி பகுதியில் வசிக்கும் பூல்மதி தேவி ஆடுகளை வளர்த்து வருகிறார். ”ஒரு மாதத்திற்கு முன்பிருந்து ஆட்டுப்பால் வேண்டும் என்று கேட்டு வருகைதரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. டெங்கு காய்சல் வந்தவர்களுக்கு கொடுப்பதற்காக ஆட்டுப்பால் வேண்டும் என்று கேட்கிறார்கள்” என்கிறார் பூல்மதி.

ஆட்டுப்பால்

ஒரு கிளாஸ் ஆட்டுப்பாலின் விலை 150 ரூபாய்

டாக்டர்ஸ் காலனி பகுதியில் ஆட்டுப்பால் விற்கும் சுரேஷ் பாஸ்வான் இவ்வாறு கூறுகிறார், ”துர்கா பூஜை சமயத்தில், ஆட்டுப்பால் வேண்டும் என்று கேட்டவாறு மக்கள் பெருமளவில் வந்தார்கள். ஒரு கண்ணாடி கிளாஸ் நிரம்ப ஆட்டுப்பால் கொடுத்தால் 150 ரூபாய் கிடைத்தது. தீபாவளிக்கு பிறகு படிப்படியாக விலை குறைந்துவிட்டது”.

அதாவது தேவை அதிகமாக இருந்த காலகட்டத்தில் ஒரு லிட்டர் ஆட்டுப்பால் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது என்று பொருள் கொள்ளலாம்.

உண்மையில், வானிலை மாற்றங்களால் டெங்கு பாதிப்பு குறைந்துவிட்டதால், ஆட்டுப்பாலின் தேவையும் குறைந்துவிட்டது.

பட்னாவின் முன்னாசக் பகுதியில் வசிக்கும் அருண்குமாரின் வீட்டிலும் டெங்கு காய்ச்சல் அதிகம் இருந்த சமயத்தில் ஆட்டுப்பால் பயன்படுத்தப்பட்டது.

”தீபாவளி சமயத்தில் என் அம்மாவுக்கு டெங்கு காய்ச்சல் வந்தது. அப்போது மருத்துவரின் அறிவுரையின்படி, தினமும் காலை-மாலை என தினமும் இருவேளை ஆட்டுப்பால் கொடுத்தோம்” என்கிறார் அவர்.

கருண் ஷா

வீட்டு வைத்தியம்

மக்கள் வீட்டு வைத்தியமாக ஆட்டுப்பாலை மட்டுமல்ல, கழுதைப்பாலையும் கொடுக்கிறார்கள்.

சாலை போடுவது, தார் காய்ச்சுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டிருக்கும் பதல்கட் சமுதாயத்தை சேர்ந்தவர்கள், கல் மற்றும் அதிக எடையுள்ள பொருட்களைக் கொண்டு செல்வதற்காக கழுதைகளை வளர்க்கிறார்கள்.

அந்த சமுதாயத்தை சேர்ந்த கருண் ஷா சொல்கிறார், “குளிர்காலத்தில், கழுதை பாலை அதிகமாக பயன்படுத்துவார்கள். குறிப்பாக காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கழுதைப்பாலை அருந்துவார்கள். கழுதைப்பால் வேண்டுபவர்கள் சூரிய உதயத்திற்கு முன்பே வந்துவிடுவார்கள்.”

இருந்தாலும், இதுபோன்ற நம்பிக்கைகளுக்கு எந்தவித ஆதாரமோ, மருத்துவ அறிவுறுத்தல்களோ கிடையாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பாட்னா இந்திய மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் எஸ்.என்.பி. சிங் கூறுகிறார்: “பேச்சுவாக்கில் வந்த செய்திகளை கேட்டு மக்கள் ஆட்டுப்பாலை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்”.

“மாட்டுப்பாலில் இருக்கும் பொட்டாசியம், கால்சியம், கொழுப்பு என அதே சத்துக்கள்தான் ஆட்டுப் பாலிலும் இருக்கிறது. ஊட்டச்சத்தில் பெரிய அளவிலான வேறுபாடு ஏதுமில்லை. கால்நடைகளின் பால் அனைத்திலும் ஏறக்குறைய ஒரே மாதிரியான ஊட்டச்சத்துகளே இருக்கும்.”

மாட்டுப்பால், எருமைப்பால் ஆட்டுப்பால், கழுதைப்பால் என கால்நடை விலங்குகள் அனைத்திலும் ஒரேமாதிரியான சத்துக்கள் இருக்கிறது என்று சொன்னாலும், மக்களின் நம்பிக்கைகள் மருத்துவர்களின் கருத்துகளால் மாறுமா? காட்டு விலங்குகளிடம் இருந்து கிடைக்கும் புலிப்பால், சிறுத்தைப்பால், சிங்கப்பால் என்று அபாயகரமான மூடநம்பிக்கைகளை யாரும் பரப்பமாட்டார்கள் என்று நம்புவோம்.