கேரளாவை சேர்ந்த அக்சரா என்ற மாணவி எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோதும் பிஏ சைக்காலஜி பயின்று வருகிறார்.
ஆனால், தனது நோயினை அறிந்துகொண்ட மாணவிகள் இவருடன் விடுதி அறையில் தங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து முதியோர் இல்லத்தில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வருகிறார்.
+2 வில் அதிக மதிப்பெண் எடுத்த அக்ஷராவை அவரது தாய் ரிமா, கண்ணூரில் உள்ள விராஸ் கல்லூரியில் பி.ஏ சைக்காலஜி சேர்த்துவிட்டதில், அக்ஷரா மகிழ்ச்சியோடு படித்து வந்தார்.
ஆனால், இவருக்கு எச்ஐவி இருப்பது இவருடன் விடுதி அறையில் தங்கியிருந்த மாணவிகளின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து, தங்களது மகள்களை இனிமேல் விடுதியில் தங்க வைக்க முடியாது என கூறி வெளியேறிவிட்டனர்.
இதனால், அக்ஷராவையும் விடுதிக்குள் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தனக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து அக்ஷரா தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கேரளாவில் தலைப்பு செய்தியாகியுள்ளது.
அக்ஷரா கூறியதாவது, இந்த சம்பவத்தில் இருந்து என்னால் கல்லூரிக்குள் தலைகாட்டவே கஷ்டமாக இருக்கிறது. என்னை வெளியேற்றச் சொன்ன மாணவிகளை கல்லூரியில் சந்தித்தபோது, அவர்கள் என்னிடம் நல்லமுறையில்தான் நடந்து கொண்டனர்.
எனக்கு மற்ற விடுதிகளில் அனுமதி கிடைக்காது எனவும் சொல்லிவிட்டனர். நான் தங்கியிருக்கும் இடத்திலிருந்து கல்லூரிக்குச் செல்லவே நான்கு மணி நேரம் ஆகிறது. தினசரி வகுப்புகளை அட்டெண்ட் செய்வதும் மிகக் கடினம்.
அடுத்த மாதம் இரண்டாவது செமஸ்டருக்கான தேர்வுகள் நடக்க இருக்கிறது. இருக்கும் ஒரே தீர்வு, கல்லூரியில் இருந்து நான் வெளியேறுவதுதான் என வேதனையாக கூறியுள்ளார்.
அக்ஷராவின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், கல்லூரி நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில் அக்ஷராவை வெளியேற வேண்டும் என நாங்கள் வற்புறுத்தவில்லை. சக மாணவிகளின் பெற்றோர் தவறாக புரிந்துகொண்ட காரணத்தால் இப்படி நடந்துள்ளது.
அக்ஷரா கல்லூரி விடுதியில் தங்கி படிப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, அக்ஷராவைன் தாயை தத்தெடுக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால், எனது தாயை தத்தெடுக்க வேண்டாம், அவரும் அதை விரும்ப மாட்டார் என கூறிய அக்ஷரா, எனது படிப்பினை தொடர வேண்டும் என்பதே ஆசை என கூறியுள்ளார்.