குமுதம் வார இதழில் தான் எழுதிய தொடரில், சோபன் பாபுவுக்கும் தமக்குமான உறவை ஜெயலலிதா வெளிப்படையாக எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஏன் ஜெயலலிதா தனது அந்தரங்க வாழ்க்கையை அம்பலப்படுத்த வேண்டும்..? என்கின்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதா..?
இது குறித்து, வார்த்தை சித்தர் வலம்புரிஜான் ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்திலேயே., நக்கீரன் வார இதழில் எழுதிய ‘வணக்கம்’ தொடரில் அம்பலப்படுத்தினார்.
தாய் பத்திரிகை காலத்தில் இருந்து எம்ஜிஆர் மறைவு வரை எம்ஜிஆர்-ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமானவராகவர் இருந்தவர் வலம்புரிஜான். ஜெயலலிதா அரசியலில் நுழைந்த ஆரம்ப காலத்தில் அவரது பேச்சுகளை எழுதிக் கொடுத்ததும் வலம்புரிஜான்தான்.
ஜெயலலிதாவின் 1991-96 அராஜ ஆட்சி காலம் குறித்து நக்கீரன் வார இதழில் “வணக்கம்” என்ற தலைப்பில் வலம்புரிஜான் எழுதிய தொடர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதில் சோபன் பாபுவுக்கும் தமக்குமான உறவை ஜெயலலிதா ஏன் பகிரங்கப்படுத்தினார்..? என்பது குறித்து “சோபன்பாபுவுடன் ஜெயலலிதா” என்ற அத்தியாயத்தில் வலம்புரிஜான் எழுதியிருப்பதாவது:
சோபன்பாபு என்கிற தெலுங்கு நடிகரோடு ஜெயலலிதா பரமபதம் விளையாட்டில் ஈடுபட்டிருந்தார் என்பதை சினிமாக்காரர்கள் எல்லோருமே அறிவார்கள்.
அவரே குமுதத்தில் தனது வாழ்க்கை வரலாற்றை விவரித்தப்போது இதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்.. ஜெயலலிதா ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் சோபன் பாபுவைக் குறிப்பிட்டு, ‘I am going steady’ என்று நாவாடியிருந்தார்.
இதுவழக்கமான சினிமாக்காரிகள் அம்மணமாக நின்று கொண்டு, அழுக்குத் துணிகளை பகிரங்கமாக துவைக்கிற பச்சைத்தனம் என்று எவரேனும் நினைத்தால் நீங்கள் ஜெயலலிதாவை அறிந்துகொள்ளவே ஆரம்பிக்காதவர்கள் என்று அர்த்தம்.
சோபன்பாபுவோடு தான் வாழ்ந்த காலத்தைக் குறித்து ஜெயலலிதா எழுதியவை எல்லாம் பரபரப்பை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் சொல்லப்பட்டவைகளும் அல்ல. சத்தியத்திற்குச் சாட்சியம் சொல்லுவதற்காக சரிந்தவைகளும் அல்ல.
இந்த நேரத்தில் உறுதியாக ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். சினிமாக்காரியான ஜெயலலிதாவிற்கு நேர்ந்த ஒரு தொழில் விபத்தைக் கொச்சைப்படுத்துவது எனது நோக்கம் அல்ல. எந்தப் பெண்ணுக்கும் களங்கம் கற்பிப்பது எனக்கு உடன்பாடானது அல்ல.
கடந்த கால இருட்டிற்குள் வெளிச்சத்தைப் பாய்ச்சுகிற போது நெளிகிற உண்மைகளை நிகழ்காலத்திற்கு எடுத்துக் காட்டுவது எழுத்தாளனின் கடமையாகிறது.
வேறொருவரும் எடுத்துச் சொல்ல இயலாத வண்ணம் தனது வாழ்க்கையைப் பற்றி தானே வெளிச்சம்போட்டுக் காட்ட வேண்டிய அவசியம் ஜெயலலிதாவுக்கு என்ன வந்தது? இங்கேதான் ஜெயலலிதாவை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
‘ எம்ஜிஆர் எனது அரசியல் ஆசான்’ என்று எப்போதாவது ஒருமுறை குறிப்பிட்டுக் கொள்கிற ஜெயலலிதா, எம்.ஜி.ஆரை நோகடிப்பதற்காகவே இவ்வாறெல்லாம் தனது வாழ்க்கையின் அந்தரங்கத்தைப் பகிரங்கப்படுத்தினார்.
ஒரு காலத்தில் எம்ஜிஆரோடு இணைந்திருந்து ஏறத்தாழ அவரது மாற்று மனைவி என்று மக்களாலேயே கருதப்பட்ட ஜெயலலிதா, எம்ஜிஆரை விட்டு ஒதுங்கினார். ஒதுக்கப்பட்டார்.
அந்த காலகட்டத்தில் இழந்த தன்னை நினைத்து, எம்.ஜி.ஆர். ஏங்க வேண்டும் என்பதற்காகவே தனது உல்லாச வாழ்க்கையை ஜெயலலிதா ஊரறிய வைத்தார். இந்த மோதலுக்கும் ஜெயலலிதாவின் இவ்வாறான முடிவிற்கும் எம்.ஜி.ஆரும் காரணம் என்பதை நான் மறுக்கவில்லை.
ஆனால் இங்கே எடுத்துக்காட்ட விரும்புவதெல்லாம் ஜெயலலிதாவிடம் பழிவாங்குகிற குணம் பதுங்க ஆரம்பித்ததற்கு அவரது கடந்த காலம் ஒரு காரணம் என்பதுதான்.
இவ்வாறு வலம்புரிஜான் பதிவு செய்துள்ளார்.