தமிழகத்தில் சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த் தன் தாய் சரளாவை கொன்றுவிட்டு நகைகளை எடுத்துக்கொண்டு தலைமறைவாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்த ஹாசினி(6), கடந்த பிப்ரவரி மாதம் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானர்.
அதன் பின் பொலிசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போது, சிறுமி ஹாசினி வசித்து வந்த அதே குடியிருப்பைச் சேர்ந்த தஷ்வந்த் என்ற இளைஞனை பொலிசார் கைது செய்தனர்.
அதைத் தொடர்ந்து அவனிடம் நடத்திய விசாரணையில், அவன் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது.
இதனால் தஷ்வந்த் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. இதை எதிர்த்து தஷ்வந்தின் தந்தை சேகர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், அவன் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டு ஜாமீன் வழங்கப்பட்டது.
ஜாமீன் பெற்ற தஷ்வந்த், குன்றத்தூரில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தார். இந்தநிலையில், தஷ்வந்த், தனது தாய் சரளாவை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு, வீட்டிலிருந்த நகைகளுடன் மாயமாகிவிட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து புகார் அளித்துள்ளதால், வழக்கு பதிவு செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.