ஏலத்தில் அடிமைகளாக விற்கப்படும் அகதிகள்: என்ன வேலை செய்கிறார்கள் தெரியுமா?

ஏலத்தில் மிக குறைந்த விலைக்கு அடிமைகளாக லிபியாவில் விற்கப்படும் அகதிகள் மிகவும் துயரத்துக்கு ஆளாகிறார்கள் என தெரியவந்துள்ளது.

இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, எரிட்ரியா, ஐவரி கோஸ்ட், சூடன், சோமாலியா போன்ற நாடுகளிலிருந்து ஐரோப்பாவுக்கு செல்ல முயலும் அகதிகள் லிபியாவில் சமூக விரோதிகளால் பிடித்து வைக்கப்படுகிறார்கள்.

பின்னர் அகதிகள் $200-லிருந்து $500 வரையிலான விலைக்கு அடிமைகளாக ஏலத்தில் விற்கப்படுகிறார்கள்.

ஏலத்தில் விற்கப்படும் அகதிகள் கட்டிட வேலை, விவசாயம் போன்ற பணிகளுக்கு அதிகம் பயன்படுத்தபடுகிறார்கள்.

இதில் பலருக்கு ஊதியம் தரப்படாத நிலையில் வலுக்கட்டாயமாக வேலை செய்ய வைக்கப்படுகிறார்கள்.

லிபியாவின் பிரதமராக இருந்த முஹாமர் கடாபியின் பதவி போன பிறகே இந்த விடயம் நாட்டில் அதிகரித்துள்ளது.

லிபியாவில் மனித கடத்தல் குறித்த அவசர கூட்டத்தை நடத்திய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பொருளாதாரத் தடைகள் குறித்து விவாதித்தது, ஆனாலும் தீர்மானம் எதுவும் இயற்றப்படாமலேயே கூட்டம் முடிந்தது குறிப்பிடத்தக்கது.