புதுவை வாணரப்பேட்டை நாகமுத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகள் குணவதி (வயது37) இவர் புதுவை பெரிய மார்க்கெட்டில் மொத்தமாக பூவாங்கி வந்து அதனை தொடுத்து வாணரப்பேட்டை பகுதியில் விற்று வந்தார்.
தினமும் பெரிய மார்க்கெட்டுக்கு பூவாங்க செல்லும் போது அங்கு பூக்கடையில் வேலை செய்து வந்த திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
பிரபாகரன் தனக்கு திருமணமாகி மனைவி இருப்பதை மறைத்து குணவதியுடன் பழகி வந்தார்.
பிரபாகரன் தன்னை திருமணம் செய்து கொள்வார் என்ற எண்ணத்தில் அவரது ஆசைக்கு குணவதி இணங்கி வந்தார். இதில் குணவதி கர்ப்பம் அடைந்தார்.
இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பிரபாகரனிடம் குணவதி வலியுறுத்தியபோது பல்வேறு காரணங்களை கூறி திருமணம் செய்யாமல் பிரபாகரன் காலம் கடத்தி வந்தார்.
இதற்கிடையே கடந்த 8 மாதத்துக்கு முன்பு குணவதிக்கு ஆண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சதீஷ்குமார் என பெயர் சூட்டி குணவதி வளர்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று பிரபாகரனிடம் தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று குணவதி வலியுறுத்தினார்.
தொடர்ந்து குணவதி தொல்லை கொடுக்கவே சில நாட்களுக்கு முன் திருமணம் செய்வதாக கூறி குணவதியை கோரிமேட்டுக்கு வருமாறு அழைத்தார். இதனை உண்மை என்று நம்பிய குணவதி தனது பெற்றோரிடம் கூறிவிட்டு குழந்தையுடன் ஆட்டோவில் கோரிமேட்டுக்கு சென்றார்.
ஆனால், அதன்பிறகு குணவதி பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவரை செல்போனில் தொடர்பு கொண்ட போது, அந்த செல்போனை வேறொருவர் பயன்படுத்தி வந்தார். அவரிடம் கேட்ட போது அந்த செல்போன் கோரிமேடு செக்போஸ்டில் கிடந்ததாக தெரிவித்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த குணவதியின் பெற்றோர் தங்களது மகள் கைக்குழந்தையுடன் மாயமானது குறித்தும், பிரபாகரன் தனது மகளை கோரிமேட்டுக்கு அழைத்த விவரத்தையும் ஒதியஞ்சாலை போலீசில் தெரிவித்தனர்.
ஆனால் குணவதி மாயமான இடம் கோரிமேடு என்பதால் கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கும்படி அவரது பெற்றோரிடம் போலீசார் அறிவுறுத்தினர்.
இதையடுத்து அவர்கள் இதுபற்றி கோரிமேடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து பிரபாகரனை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது குணவதி தொடர்ந்து திருமணத்துக்கு வற்புறுத்தியதால் அவரையும், அவரது கைக்குழந்தையையும் கிளியனூர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று கொலை செய்து அங்குள்ள சித்தேரியில் உடலை வீசியதாக தெரிவித்தார்.
குணவதி முகத்தில் துணியால் அமுக்கி மூச்சு திணறடித்து கொன்றதாகவும், அதே போல் குழந்தையையும் மூச்சு திணற வைத்து கொன்றதாகவும் கூறினார்.
இதைத்தொடர்ந்து பிரபாகரனை போலீசார் கைது செய்தனர். போலீசார் நேற்று பிரபாகரனை கிளியனூருக்கு அழைத்து சென்று அங்கு சித்தேரியில் வீசப்பட்டு கிடந்த குழந்தையின் உடலை மீட்டனர்.
தொடர்ந்து குணவதியின் உடலை தேடினர். ஆனால், இருள் சூழ்ந்து விட்டதால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சித்தேரியில் தண்ணீர் நிரம்பி இருந்தது. இதனால் குணவதியின் உடலை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இன்று பகல் மீண்டும் பிரபாகரனை அழைத்து சென்று சித்தேரியில் குணவதி உடலை தேடினார்கள். இப்பணியில் கிளியனூர் தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டனர். அங்கு தண்ணீருக்கு அடியில் முட்புதருக்குள் குணவதி உடல் சிக்கி கிடந்தது. அதை மீட்டெடுத்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.