யாழ்ப்பாணம் பொன்னாலை மற்றும் சாவகச்சேரி ஆகிய பகுதிகளில் வைத்து இரண்டு ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதியில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களிற்கு இலவச கல்வியை வழங்கிவரும் வெண்கரம் படிப்பகத்திற்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்கள் நேற்றிரவு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதல் முன்னாள் அரசியல் கைதியான க.கோமகன் மற்றும் ஊடகவியலாளர் ந.பொன்ராசா ஆகியோர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கார்த்திகை விளக்கீட்டை முன்னிட்டு வீதியில் பொதுப்போக்குவரத்திற்கு இடையூறாக சிலர் ரயர் எரித்துள்ளனர்.
இதன்போது வெண்கரம் நிறுவனம் முன்பதாக ரயர் எரிக்கப்பட்டிருந்த நிலையில் அதன வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இரு மாணவர்களை படிப்பகத்திற்குள் வருமாறு கூறியதுடன் ரயர் எரிக்கவேண்டாம் என முன்னாள் அரசியல் கைதியான ககோமகன் மற்றும் ஊடகவியலாளர் ந.பொன்ராசா ஆகியோர் கோரியுள்ளனர்.
இதனையடுத்தே ரயர் எரித்த நபர்கள் படிப்பகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து தாக்குதல் நடத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவர் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பிராந்திய ஒளிபரப்பாக செயற்படும் யாழ்.எப்எம் வானொலியில் கடமையாற்றும் ஊடகவியளாளர் எஸ்.மனோகரன் மீது நேற்றைய தினம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சாவகச்சேரியில் அமைந்துள்ள வீட்டிற்கு குறித்த ஊடகவியலாளர் சென்ற போதே அவருடைய வாகனத்தை மறித்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் நேற்று மாலை சாவகச்சேரி தனங்களப்பு வீதியில் இடம்பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத நபர்களினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.