ஊடகங்களுக்கு எதிரான குற்றமானது ஜனநாயகத்திற்கு எதிரான குற்றமாகும் என ஸ்ரீலங்கா பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான சட்டவிலக்களிப்பை முடிவுக்கு கொண்டு வருவதன் ஊடாக ஆசியாவில் சட்டவாட்சி மற்றும் கருத்து வெளியிடும் சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கான பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்தல் தொடர்பான யுனஸ்கோவின் செயலமர்வில் பிரதான உரையை வழங்கிய போதே அவர் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார்.
ஊடகவியலாளர்களை நாம் பாதுக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தண்டனை விலக்களிப்பை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஊடக அடக்குமுறை மற்றும் துஷ்பிரயோகங்களை நிறுத்துமாறு அனைத்து அரசாங்கங்களையும் தகவல் அறிந்த சமூகம் வலியுறுத்துவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
2015ஆம் ஆண்டு ஆட்சிக்குவந்த நல்லாட்சி அரசாங்கம், ஊடகங்களுக்கு எதிரான குற்றங்களை முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் எந்தவொரு ஊடகவியலாளரும் கடத்தப்படவில்லை எனவும், கொலை செய்யப்படவில்லை எனவும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படவில்லை எனவும் அச்சுறுத்தப்படவில்லை எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
முன்னைய மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பல ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டதாகவும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் துன்புறுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் தற்போது ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவ்வாறான குற்றங்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டார்.