
நாற்பது வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு இதய நோய் ஏற்பட உடல் பருமனைவிட ஆபத்து காரணியாக இருப்பது, இளம் வயதிலேயே முடி நரைத்தல் மற்றும் வழுக்கை விழுதல் தான் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இந்தியாவில் 2000 இளம் ஆண்களை வைத்து ஆய்வு செய்ததில் இது தெரிய வந்துள்ளது. தலைமுடி அதிகம் இருப்பவர்களை விட, இளநரை அல்லது வழுக்கை தலை விழுந்த ஆண்களுக்கு இதய நோய்கள் அதிகம் வந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மற்ற ஆபத்து காரணிகளும் முக்கியம் என பிரிட்டிஷ் இதய அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
“இளநிரை, வழக்கைத் தலை பிரச்சனை உள்ள ஆண்களை கண்டுகொண்டால், இதய நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளவர்களை கண்டுகொள்ள முடியும்” என பிபிசியிடம் பேசிய பிரிட்டிஷ் இதய அறக்கட்டளையின் இணை மருத்துவ இயக்குனர் மைக் நாப்டன் கூறினார்.
“சிலவற்றை மக்களால் மாற்ற முடியாது. எனினும், அதிக கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தம் போன்ற ஆபத்து காரணிகளை குறைக்கும் வகையில் நம் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளலாம். இவை பரீசிலிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள்” என்றும் மைக் தெரிவித்தார்.
இளநரை
கொல்கத்தாவில் நடைபெற உள்ள 69-ஆவது சிஎஸ்ஐ வருடாந்திர மாநாட்டில் இந்த ஆய்வு வழங்கப்பட உள்ளது.
இதய நோய் இருந்த நாற்பது வயதுக்குட்பட்ட ஆண்கள் 790 பேரும், அதே வயதிலிருக்கும் நல்ல உடல்நலத்துடன் இருந்த 1,270 ஆண்களும் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இவர்களின் தலை வழுக்கை அளவின் குறிப்பை வைத்து அவர்களின் மருத்துவ வரலாறுகள் எடுக்கப்பட்டன. பெரும்பாலான ஆண்களுக்கு ஏற்படும் தலைமுடி உதிர்தல் மற்றும் நரைத்தல் போன்ற விஷயங்களும் கணக்கெடுக்கப்பட்டன.
இதன் கண்டுபிடிப்புகளை, இதய நோய் வர அதிக வாய்ப்புள்ள அறிகுறிகளுடன் தொடர்புபடுத்தி பார்த்தனர்.
பின்னர், இளநிரை இருப்பவர்களுக்கு இதய நோய் வர அதிக வாய்ப்புள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதே போல, 2013 ஆம் ஆண்டில் ஜப்பானில் 37 ஆயிரம் நபர்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் வழுக்கைத் தலை இருக்கும் ஆண்களுக்கு இதய நோய் வர 32 சதவீதம் வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள வழிகள்

- நாள் ஒன்றுக்கு பழம் மற்றும் காய்களை ஐந்து பகுதிகளாக சாப்பிட வேண்டும்
- புகை பிடிப்பதை நிறுத்த வேண்டும்
- சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்
- உடல்எடையை கட்டுப்படுத்தல்
- நார் சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளலாம்
- அதிக கொழுப்புள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்
- உணவில் உப்பின் அளவை குறைக்க வேண்டும்
- மீன் சாப்பிடலாம்
- மது அருந்துவதை குறைக்க வேண்டும்