ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் மருதுகணேஷின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி என்று ஆரம்பித்து அதிமுக மற்றும் திமுகவுக்கு நாங்கள் தான் மாற்று என மதிமுக, விசிக, இரண்டு கம்யூனிஸ்ட் இயக்கங்கள், தேமுதிக, தமாக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை சந்தித்தன.
தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக தலைவர் கருணாநிதி மற்றும் செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோரை மிக கடுமையான விமர்சித்து பிரச்சார மேடைகளில் முழங்கினார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
இதனைத்தொடர்ந்து திமுகவின் முரசோலி பவள விழாவில் கலந்துகொண்டது, திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுர இல்லத்தில் சந்தித்து உடல்நலம் விசாரித்தது என திமுகவுடன் நெருக்கம் காட்ட தொடங்கிய வைகோ திடீரென ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரிப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் இன்று மதிமுக தலைமையகமான தாயகத்தில் வைகோவை சந்தித்த திமுக வேட்பாளர் மருதுகணேஷ் தேர்தல் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் வெற்றிபெறுவதை யாராலும் தடுக்க முடியாது என தெரிவித்தார்.