எனக்கு ஆண் பிள்ளை பிறந்திருக்கான், என்று சொல்லும் போதே, பல தகப்பன்களுக்கும், தாய்களுக்கும் ஒரு இறுமாப்பு வருகிறது.
நமக்கென்ன கவலை, நாம் என்ன பெண் பிள்ளையா பெற்றிருக்கிறோம், ஆண் பிள்ளையை அல்லவா பெற்றிருக்கிறோம், என்று சற்று ஆணவத்துடன் இருக்கும் பெற்றோர்கள், அவர்கள் வளர்ந்து ஆளானதும், அதே மகனுக்கு பெட்டிப்பாம்பாக அடங்கி, அமைதியாகி விடுவது தான் கொடுமையிலும் கொடுமை!.
ஆண் பிள்ளைகள் என்று கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுப்பது, அதிக செல்லம் கொடுத்து வளர்ப்பது போன்றவை, அவன் கூடிய விரைவில், ஒரு சமுதாயக் குற்றவாளியாக மாறப் போகிறான் என்பதை அறிவதில்லை.
கல்லூரியில் சேரும் பிள்ளைகளுக்கு, பெற்றோர் செய்யும் மிகப் பெரிய தவறு, அவர்களுக்கு, பெருமையாக, விலை உயர்ந்த செல்போன்களை வாங்கித் தருவதும், அளவுக்கதிகமான பணத்தை செலவிற்கு கொடுப்பதும் தான்.
இதெல்லாம் அவனைப் படுகுழில் தள்ள, அவர்களே செய்யும் முதல்படி தான். செல்போன்கள் இன்று, அறிவியல், நுட்பத்துடன் ஆபாசத்தையும், வன்முறையையும் குவித்து வைத்து அவர்களுக்கு வாரி வழங்குகிறது.
இதில் தான் அவனது முதல் தடுமாற்றம் துவங்குகிறது. பின்னாளில், அது படிப்படியாக வளர்ந்து, அவனைத் திசை மாற வைக்கிறது.
நல்ல விசயங்களை விட, தீமைகள் தான் இளைஞர்களை வெகுவாகக் கவர்கின்றன. அதில் பட்டும் படாமல் தப்பித்துக் கொள்பவன் புத்திசாலி! மாட்டிக் கொண்டவனின் வாழ்க்கை தான் கேள்விக்குறியாகிறது.
இந்த வகையில் பல இளைஞர்களைப் போதையில் ஆழ்த்தி, அவர்களிடம் உள்ள பணத்தைப் பறிப்பதற்கென்று, ஒரு கூட்டமே இருக்கிறது.
இந்த இளைஞர்கள் தாங்கள் செய்வது தவறு என்று தெரிந்து, திருந்தி வர நினைத்தாலும், அந்தக் கும்பல் அவர்களை விடாது துரத்தி, அவனை யோசிக்கவே முடியாதபடி, போதையில் மூழ்கடித்துக் கொண்டேயிருக்கும்.
இந்த போதை என்பது, டாஸ்மாக்கில் வருவதல்ல. அதற்குப் பல மாற்று வழிகள் உள்ளன. இருதய அறுவை சிகிச்சை செய்தவர்களுக்காக கொடுக்கப்படும், தூக்க மாத்திரை, வித்தியாசமானது.
இதை இதய அறுவைச் சிகிச்சை செய்தவர்கள் மட்டுமே உட்கொள்ள வேண்டும். இதைச் சாப்பிட்டவுடன், அவர்கள் தங்களை மறந்து அசந்து உறங்கி விடுவார்கள். அதைத் தான் தற்போது, பல கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் உட்கொள்கிறார்கள்.
இந்த மாத்திரையை, டாக்டரின் பரிந்துரை இல்லாமல், மருந்துக் கடைகளில் விற்பனை செய்யக் கூடாது. ஆனால், சிலர் பணத்திற்கு ஆசைப்பட்டு, இந்த மாத்திரையை அதிக விலைக்கு விற்கிறார்கள்.
இந்த மாத்திரை என்ன செய்யும்? இதை உட்கொள்ளும் இளைஞர்கள், உறங்குவதில்லை. மாறாக இந்த மாத்திரையைப் போட்டுக் கொண்டு, வகுப்பறையிலே கூட சாதாரணமாக உட்கார்ந்திருப்பார்கள்.
உடல் மட்டும் தான் வகுப்பில் உட்கார்ந்திருக்கும். மனம் உயர உயரப் பறந்து கொண்டேயிருக்கும்.
அவனைச் சுற்றியிருக்கும் மனிதர்கள் எல்லாம், நடமாடும் பிணங்களைப் போலத் தோன்றுவார்கள்.
அவன் பார்க்கும் பெண்கள் எல்லாம் அவனுக்குப் போகப் பொருளாகத் தெரிவார்கள். பலர் இந்த மாத்திரையுடன், ஓட்கா என்ற மதுவையும் சேர்த்து அருந்துவார்கள்.
இந்த ஓட்கா மதுவும் மாத்திரையும், இதை உட்கொள்பவர்களிடம் எந்த விதமான வாடையையும் ஏற்படுத்தாது.
அதனால், இதனை உட்கொள்பவர்களை எளிதில் கண்டு பிடிக்க முடியாது. ஆனால், அவர்கள் தனிமையை மட்டுமே விரும்புவார்கள். அவர்கள் கண்களுக்குத் தெரியும் உலகமே வேறாகத் தெரியும்.
அவர்களுடன் யாரும் தொடர்ந்து பேச்சுக் கொடுத்தால் எரிச்சல் படுவார்கள். வீட்டில் பெற்றோரோ, அல்லது உறவினரோ, ஏன்டா, இப்படி இருக்கே, என்ன காரணம் என்று கேட்டால், போதும், தவம் தடைபட்ட முனிவரின் கோபக்கனலை விட, இவர்களது கோபம் ஆயிரம் மடங்காக மாறி விடும். பெற்ற தாய் என்றும் பாராமல், தகப்பன், தம்பி, தங்கை, அண்ணன் என்றும் பாராமல், அவர்களைக் கண் மூடித்தனமாகத் தாக்கத் துவங்குவார்கள்.
அதன் தீவிரம் அடுத்தடுத்து விறுவிறுக்கும். கண்ணில் பட்டதை எல்லாம் உடைப்பார்கள். எதிரில் நிற்பவர்கள் மனிதர்கள் என்று நினைக்கும் அளவிற்கு கூட, அவர்களுக்கு சுய நினைவின்றி பயங்கர சைக்கோவாக மாறி விடுவார்கள்.
இந்த மாதிரியான நபர்களை, யோசிக்காமல், மனநல மருத்துவமனயில், உள்நோயாளியாகத் தங்க வைத்து, குறைந்தது ஒரு வருடமாவது, தொடர்ந்து சிகிச்சையும், கவுன்சிலிங்கும் கொடுத்தால் மட்டுமே, இவர்கள் மீண்டும் மனிதர்களாவதற்கு வாய்ப்பு உண்டு!
இல்லாவிட்டால், இவன் சமுதாயத்திற்கு தீங்கு செய்பவனாக மட்டுமே இருப்பான். இவனை மனநோயாளி என்று சட்டமும், சிறையில் தள்ளாமல் விட்டு விடும்.
அப்போது தான் அவனைப் பெற்றவர்கள் உணர்வர்கள், “இப்படிப் பிள்ளையப் பெத்ததுக்கு, பிள்ளையே இல்லாமல் இருந்திருக்கலாமே, என்று. எனவே, பெற்றோர்களே, கண்காணியுங்கள், கல்லூரியில் படிக்கும் உங்கள் மகனை!