உடைந்த கூட்டணி: இரா.சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஆபத்தா?

இரா.சம்பந்தன்

தமிழர் விடுதலை கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தின் புதிய கூட்டணியொன்று இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நாச்சியார்மடம் பகுதியிலுள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில், கூட்டணி உருவாக்கத்திற்கான உடன்படிக்கை இன்று கையொப்பமிடப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியுள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழர் விடுதலை கூட்டணி, ஜனநாயக தமிழரசு கட்சி, ஈழவர் ஜனநாயக முன்னணி, புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் ஆகியன இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் உதய சூரியன் சின்னத்தின் கீழ் இந்த கூட்டணி களமிறங்கவுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து டெலோ அமைப்பு நேற்றிரவு வெளியேறியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி கேள்விக்குறி?

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயற்பட்டு வருகிறது.

இரா.சம்பந்தன்

இலங்கை நாடாளுமன்றத்தில் 16 ஆசனங்களை கொண்டுள்ள இந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டு வருகின்றார்.

இந்த நிலையில், கூட்டமைப்பிலிருந்து ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் டெலோ ஆகியன வெளியேறியுள்ள நிலையில், இலங்கைத் தமிழரசு கட்சி மற்றும் புளோட் அமைப்பு ஆகியனவே கூட்டமைப்பில் தற்போது அங்கம் வகிக்கின்றன.

இவ்வாறு கூட்டமைப்பை விட்டு வெளியேறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக இயங்க முன்வரும் பட்சத்தில், எதிர்க்கட்சித் தலைவர் பதவி கேள்விக்குறியாகி விடும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பிரதீபா மஹனாமஹேவா தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை தமிழரசுக் கட்சியிலுள்ள சிலர் கட்சித் தாவும் பட்சத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கேள்விக் குறியாகிவிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி, மக்கள் விடுதலை முன்னணி, கூட்டு எதிரணி ஆகியவற்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி செல்வதற்கான வாய்ப்பு காணப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறு இல்லையெனில், ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி, ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து வெளியேறி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் பட்சத்தில், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி செல்வதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

புளோட் அமைப்பின் தீர்மானம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து அங்கம் வகிக்கின்றமை தொடர்பில் விரைவில் தீர்மானம் எட்டப்படும் என புளோட் அமைப்பின் உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.