தமிழகத்தில் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் மற்றும் மாமியாருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தின் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி முத்துராமலிங்கம்- சாமுண்டீஸ்வரி. இவர்களுக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
அதன் பின் திருமணம் முடிந்த 10 நாட்களில் முத்துராமலிங்கம் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். முத்துராமலிங்கம் வெளிநாட்டிற்கு சென்றவுடன், அவரது தாய் மருமகள் சாமூண்டீஸ்வரியை குறை கூறி, கொடுமை செய்துள்ளார்.
இதனால் சாமூண்டீஸ்வரி மாமியாரின் கொடுமையை தாங்கமுடியாமல் தனது தாயின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதையடுத்து 2013-ஆம் ஆண்டு சொந்த ஊர் திரும்பிய முத்துராமலிங்கம், எப்ரல் 2-ஆம் திகதி மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
வீட்டிற்கு அழைத்து வந்த அவர், வீட்டில் வைத்து சாமூண்டீஸ்வரியை தொந்தரவு செய்துள்ளார். இதன் காரணமாக மிகவும் மன உளைச்சலுக்குள்ளான சாமுண்டீஸ்வரி, வீட்டிற்கு வந்த 2 நாட்களில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதை அறிந்த பொலிசார் அவர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தில் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கப்பட்டது.