இலங்கையில் விமான சேவைகள் தடைப்படும் அபாயம் உள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
விமானங்களுக்கான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்துக்கள் காணப்படுவதாக இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு இன்று வரவிருந்த எரிபொருள் கப்பல் தாமதமாகியதன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
எனினும் இந்த நிலைமையை சமாளிக்கும் வகையில் லங்கா இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் விமானங்களுக்காக எண்ணெய் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை தற்போது கூட்டுத்தாபனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறு விமானங்களுக்காக இந்திய நிறுவனத்திடம் எரிபொருள் பெற்றுக் கொண்டால் 330,000 அமெரிக்க டொலர் நட்டம் ஏற்படும் நிலை உள்ளது.
பொதுவாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் விமானங்களுக்காக ஒரு லீற்றர் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக 1.70 அமெரிக்க டொலர் செலவிடப்படுகின்றது. எனினும் அவசர நிலைமை காரணமாக 4.70 அமெரிக்க டொலர் செலவிட்டு இந்திய நிறுவனத்திடம் எரிபொருள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
எப்படியிருப்பினும் இந்திய நிறுவனத்தின் எரிபொருள் கப்பல் எதிர்வரும் 13ஆம் திகதி இலங்கையை வந்து சேரும் எனவும், அந்த கப்பலில் 14000 மெட்ரிக் தொன் எரிபொருள் கொண்டு வரப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது