வவுனியா – நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த நபரை நெளுக்குளம் பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.
நெளுக்குளம், குழுமாட்டுச்சந்தி, காத்தான் கோட்டம், தாஸ்கோட்டம், ஊர்மிளா கோட்டம், கூமாங்குளம் போன்ற பகுதியிலுள்ள இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக நெளுக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நெளுக்குளம் பொலிஸ் பொருப்பதிகாரி ஏ. எம். எஸ். அத்தநாயக்க அவர்களின் தலமையிலான பொலிஸ் குழு குறித்த நபரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது நேற்று மாலை குழுமாட்டுச்சந்தி கள்ளுத்தவரணைக்கு அருகாமையில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் காத்தான் கோட்டம் பகுதியை சேர்ந்த 32வயதுடைய மகேஸ்வரராஜா (ரமேஸ்) என்பவரை நெளுக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபரிடமிருந்து ஒரு பொதியில்10கிராம் வீதம் பொதி செய்யப்பட்டிருந்த 5 பொதிகளை பொலிஸார் கைப்பற்றியதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நெளுக்குளம் பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் ஏதும் இடம்பெறும் பட்சத்தில் நெளுக்குளம் பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்திற்கு ( 024 – 3242467) தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக் கேட்டுக்கொண்டுள்ளனர்.