முல்லைத்தீவு தண்ணீமுறிப்பு சிங்கள மயமாக்கல் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் இராணுவம் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு அரை மணித்தியாலங்களுக்கு மேல் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுகின்றமை தொடர்பில் தாம் செய்தி சேகரிப்பதற்கு சென்றதாகவும் அது தொடர்பில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் மற்றும் காணொளிகளை அழித்த இராணுவம் மற்றும் பொலிஸார் கடுமையான எச்சரிக்கை செய்து விடுவித்ததாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு சென்ற கு.செல்வக்குமார், சு.பாஸ்கரன், த.பிரதீபன் த.வினோஜித், வி.கஜீபன், சி.நிதர்சன், க.ஹம்சனன், க.சபேஸ் ஆகியோரே இவ்வாறு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் அவர்கள் ஐ.பி.சி தமிழுக்கு கூறியுள்ளனர்.
தண்ணீர் முறிப்பு குள சர்ச்சையின் பின்புலம்
யுத்தம் காரணமாக 1984 ஆம் ஆண்டு மணலாறு பூர்வீக நிலங்களில் இருந்து தமிழ் மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் அங்கு படிப்படியாக சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டிருந்தனர்.
இந்த குடியேற்றங்களுடன் மணலாறு என்ற பாரம்பரிய தமிழ் பெயர் வழக்கொழிந்து போன நிலையில் அந்த பகுதி வெலி ஓயா என தற்போது வரை அழைக்கப்படுகின்றது.
கரைத்துறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தண்ணீர் முறிப்பு குளத்தில் பாரம்பரியமாக தமிழர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த நிலையில், யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட சூழ்நிலையில் 2010 ஆம் ஆண்டு முதல் சிங்கள மீனவர்களும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
சிங்கள மீனவர்கள் காடுகள் ஊடாக வருகைதந்து தண்ணீர்முறிப்பு குளத்தில் மீன்பிடியில் ஈடுபடுவதால் பாரம்பரியமாக தொழில் செய்துவந்த தமிழ் மீனவர்களுடன் சிங்கள மீனவர்கள் முரண்படும் நிலைமை நீடித்துவருகின்றது.
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பல்வேறு தடவைகள் கலந்துரையாடல்கள் நடைபெற்ற போதிலும் இந்தப் பிரச்சினை தொடர்பில் இதுவரை இணக்கப்பாடு எட்டப்படாத நிலைமை காணப்படுகின்றது.
தண்ணீர் முறிப்பு குளத்தில் சிங்கள மீனவர்கள் தமக்கும் தொழிலில் ஈடுபட அனுமதிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இருப்பினும் அக் கோரிக்கையை அரச அதிபர் அடியோடு நிராகரித்திருந்தார்.
இருப்பினும் சிங்கள மீனவர்கள் இராணுவ பாதுகாப்புடன் அக் குளத்தில் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தமிழ் மற்றும் சிங்கள மீனவர்களுக்கு இடையில் முறுகல் நிலை தொடர்ந்து வருகின்றது.
தண்ணீர் முறிப்புக்கு அறிக்கையிட சென்ற யாழ் ஊடகவியலாளர்கள்
தமிழ் – சிங்கள மீனவர்களுக்கு இடையிலான இந்த முறுகல் நிலை தொடர்பில் அறிக்கையிடுவதற்காக தண்ணீர்முறிப்பு பகுதிக்கு தாம் சென்றதாக யாழ் ஊடகவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன் இது தொடர்பில் தகவல்களை திரட்டியதுடன் அது தொடர்பாக புகைப்படங்கள் காணொளிகளையும் பதிவு செய்திருந்தாக அவர்கள் ஐ.பி.சி தமிழுக்கு தெரிவித்தனர்.
தண்ணீர் முறிப்பு குளப் பகுதியில் அரச திணைக்கள காணியான நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான காணியை ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள இராணுவம் குளத்தில் அத்துமீறி தொழிலில் ஈடுபடும் சிங்கள மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் குளத்திற்கு அருகில் புதிதாக அமைக்கும் இராணுவ கவலரன் தொடர்பில் செய்தி சேகரித்திருந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.
ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய பொலிஸாரும் இராணுவத்தினரும்
செய்தி சேகரித்துக்கொண்டிருந்த போது அங்கு துவிச்சக்கர வண்டியில் வந்த இராணுவ சிப்பாய் அங்கு நின்ற தாம் யார் என்பது தொடர்பில் விசாரித்தார் என ஊடகவியலாளர்கள் ஐ.பி.சி தமிழுக்கு குறிப்பிட்டனர்.
இதன் போது தாங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்ததாக தெரிவித்ததை அடுத்து அங்கிருந்து சென்ற அவர், சிறிது நேரத்தின் பின்னர் மற்றுமொரு இராணுவ சிப்பாயை அழைத்துக்கொண்டு அங்கு வந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.
அங்கு வந்த இரண்டு இராணுவ சிப்பாய்களும் ஊடகவியலாளர்கள் யார் என்பது தொடர்பில் விசாரணை செய்து, அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொண்டதாக ஊடகவியலளாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் தம்மை அங்கு தடுத்து வைத்த இராணுவம் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்திய நிலையில், சம்பவ இடத்திற்கு இராணுவத்தால் பொலிஸார் வரவழைக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
சிவில் உடையில் வந்த பொலிஸார் தாம் யார் என்பதை உறிதிப்படுத்தாமல் தம்மிடம் விசாரணை நடத்தியதாக யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற ஊடகவியலாளர்கள் குறிப்பிட்டனர்.
பொலிஸாரிடமும் தமது அடையாளத்தை உறுதிப்படுத்திய போதிலும். தாம் பதிவு செய்த காணொளி மற்றும் நிழற்படங்களை அழிக்குமாறு ஊடகவியலாளர்களை வற்புறுத்திய பொலிஸார் ஊடகவியலாளர்களின் புகைப்பட கருவிகளை பறித்தெடுத்து அதனை இராணுவத்திடம் ஒப்படைத்தாக அவர்கள் கூறியுள்ளனர்.
புகைப்பட கருவிகளை தம்வசப்படுத்திய இராணுவத்தினர் அதில் உள்ள காணொளி மற்றும் புகைப்படங்களை அழித்ததாகவும் தம்மை அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினர் புகைப்படம் மற்றும் காணொளி பதிவு செய்துள்ளதாகவும் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற ஊடகவியலாளர்கள் ஐ.பி.சி தமிழுக்கு குறிப்பிட்டனர்.
மேலும் ஊடகவியலாளர்கள் பயணித்த வாகன இலக்கத்தை பதிவு செய்த இராணுவம் தமது விபரங்களையும் பதிவு செய்த பின்னர் விடுவித்ததாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.