நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே கடலோர கிராமத்தில் நேற்று கரை ஒதுங்கிய இலங்கைப் படகு மற்றும் அதிலிருந்த மூவர் தொடர்பில் அதிர்ச்சி செய்தி வெளிவந்துள்ளது.
குறித்த மூவரும் இந்தியாவில் உள்ள ஒருவருக்கு கஞ்சா கொடுத்து விட்டு, அவரிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு மீண்டும் இலங்கைக்கு செல்லும் போதே அரை மயக்கத்தில் இருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மற்றும் பருத்தித்துறையைச் சேர்ந்த கடகராஜன், ஸ்ரீமுருகன், விஜயேந்திரன் என்ற மூவருமே இதில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
புஷ்பவனம் கடலோரக் கிராமத்தைச் சேர்ந்த முனீஸ்வரன் என்பவருக்கு, இலங்கையைச் சேர்ந்த இந்த மூவரும் கஞ்சா கொடுத்து வியாபாரம் செய்து வந்துள்ளார்கள்.
நெடுங்காலமாக நடந்துவந்த கடத்தல் பரிவர்த்தனையில், இந்தியாவில் உள்ள நபர் கஞ்சாவுக்குரிய பெரும் தொகை பணத்தை கொடுக்காமல் காலத்தை நீடித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த இலங்கைக்காரர்கள், சில தினங்களுக்கு முன் இந்தியாவுக்குச் சென்று முனீஸ்வரனை சந்தித்து கடுமையாக மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.
”ஒருவாரத்தில் பணம் தந்துவிடுகின்றேன்” என்று முனீஸ்வரன் பதில் சொல்லியிருக்கின்றார்.
ஆனால், அவர்கள் முனீஸ்வரனை நம்பாமல், இந்தியாவுக்கு சென்ற இலங்கையர் மூவரில் சிறீமுருகன் என்பவர் முனீஸ்வரனின் வீட்டிலேயே தங்கியுள்ளார்.
இந்த நிலையில், சிறீமுருகன் பாஸ்போர்ட், விசா இல்லாமல் கள்ளத்தனமாக வந்து தங்கியது தொடர்பில் வேதாரண்யம் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சிறீமுருகனையும் அவனுக்கு அடைக்கலம் தந்த முனீஸ்வரனையும் வேதாரண்யம் பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையிலிருந்த இருவரும் இரு தினங்களுக்கு முன்பு பிணையில் வெளியே வந்துள்ளனர்.
இந்தச் செய்தி, இலங்கையில் இருக்கும் குறித்த நபர்களுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் இந்தியா வந்தபோது எதிர்பாராத விதமாக படகு பழுதானதால் பொலிஸில் சிக்கியுள்ளனர் என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.