கோவை பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட இளவயது பெண் ஒருவர் சுற்றித் திரிந்த நிலையில், கைக்குழந்தையுடன் வந்து அவரது கணவன் மீட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பகுதியில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம் வயது பெண்ணை கடந்த செப்டம்பர் மாதம் பொலிசார் மீட்டு தொண்டு நிறுவனம் ஒன்றில் ஒப்படைத்துள்ளனர்.
இதனிடையே அந்தப் பெண்ணால், வாய் திறந்து பேச முடியாத நிலையில், கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு, 10 நாட்களுக்கு பின்னர் தமது பெயர் சசிகலா என்றும் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றும் கூறினார். அத்துடன் கணவரின் தொலைபேசி எண்ணையும் அவரால் சொல்ல முடிந்தது.
இந்த நிலையில் குறித்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விசாரித்த போது, எதிர்முனையில் பேசியவர் பெயர் ஜானகிராமன் என்பதும், அவர் விஜயவாடாவில் வசிப்பதும் தெரியவந்தது.
அதிகாரிகள் தெரிவித்த தகவலை கேட்டு கதறிய அவர், சசிகலா என் மனைவிதான். திடீரென காணாமல் போய்விட்டார். கைக்குழந்தை என்னிடம் பரிதவித்தபடி இருக்கிறது என துடி துடித்துள்ளார்.
மட்டுமின்றி தாம் கோவை வந்து சேரும் வரை தமது மனைவியைப் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் எனவும் பதறியுள்ளார்.
இதனிடையே கைக்குழந்தையுடன் வந்த அவரை, மின்னல்வேகத்தில் சசிகலா முன் கொண்டு நிறுத்தினர். மனைவியின் நிலையை கண்ட ஜானகிராமன் தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.
பின்னர், மனைவியின் மடியில் தலையை வைத்துக் கொண்டு கண்ணீர் சிந்தினார். மனநிலை பாதிக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு கணவரையும் குழந்தையையும் அடையாளம் தெரியவில்லை.
குழந்தையின் அழுகையும் காதுக்குள் புகுந்து சசிகலாவின் மூளையை துளைத்தெடுத்தது. கொஞ்சம் கொஞ்சமாக சசிகலாவுக்கு நினைவு திரும்பியது. சட்டென்று குழந்தையை அள்ளி மடியில் வைத்துக் கொஞ்ச ஆரம்பித்தார்.
இதனையடுத்து காவல்துறையின் ஒப்புதலுடன் ஜானகிராமன், மனைவியை சொந்த ஊரான தடா அருகேயுள்ள வரதாபாளையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மனநலம் பாதிக்கப்பட்ட தமது மனைவியை மீட்டுக் கொடுத்தவர்களை வாழ்க்கைக்கும் மறக்க மாட்டேன் என கண்ணீருடன் நன்றி கூறிவிட்டு சென்றுள்ளார் ஜானகிராமன்.