சாவகச்சேரி மாவட்ட நீதிபதி சிறிநிதி நந்தசேகரனின் சேவையைப் பாராட்டி கௌரவம்!

சாவகச்சேரி மாவட்ட நீதிபதி திருமதி சிறிநிதி நந்தசேகரனுக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று கௌரவிப்பு வழங்கப்பட்டது.

b-3பெரும் நெருக்கடியான காலப்பகுதியிலும் அதன் பின்னரும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நியாயாதிக்க வலயத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நீதிவானாகவும் மாவட்ட நீதிபதியாகவும் சேவையாற்றியமைப் பாராட்டி அவருக்கு இந்தக் கௌரவிப்பு  வழங்கப்பட்டது.

2018 ஜனவரி 2ஆம் திகதி முதல் வவுனியா மாவட்ட நீதிபதியாக சிறிநிதி நந்தசேகரன் மாற்றலாகிச் செல்கிறார்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் ஆகியோரின் தலைமையில் மேல் நீதிமன்றங்களின்  உத்தியோகத்தர்களால் இந்தக் கௌரவிப்பு நிகழ்வு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற மண்டபத்தில் இன்று(10) இடம்பெற்றது.

நீதிபதி சிறிநிதி நந்தசேகரனை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளர் திருமதி மீரா வடிவேற்கரசன் மலர் மாலை, பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன், நீதிபதி சிறிநிதி நந்தசேகரனின் சேவையைப் பாராட்டி கௌரவச் சின்னமும் மேல் நீதிமன்ற நீதிபதி இ. கண்ணன் வாழ்த்துப்பாவும் வழங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர்.

இதேவேளை இலங்கையில் மிக நெருக்கடியான மோதல் மிகு பிரதேசத்தில் எல்லா இனக்குழுமங்களையும்  நீதியின் முன் சமமாக நடாத்துவதில் ஒரு சட்டத்தரணியாகவும், நீதிபதியாகவும் பொறுப்புணர்வையும் துணிவையும் வெளிப்படுத்திய ஒரு முன்னுதாரணராக நீதிபதி திருமதி சிறிநிதி நந்தசேகரன் திகழ்கிறார் என அமெரிக்கா பாராட்டியிருந்தது.

அதற்காக அவருக்கு அமெரிக்காவின் வீரப்பெண் விருது அமெரிக்காவால் 2009 மார்ச் 24ஆம் திகதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.