கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக காணாமல் போன இலங்கை மீனவர்கள் ஐவர் ஈரான் அரசின் பாதுகாப்பில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த ஐந்து மீனவர்களையும் விமானத்தின் மூலம் நாட்டுக்கு அழைத்துவரத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 29 ஆம் திகதி பிற்பகல் முதல் சில நாட்கள் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக, ஐவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிக்கையொன்றை வௌியிட்டது.
கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி இவர்கள் மிரிஸ்ஸ துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். பின்னர் கடந்த 29 ஆம் திகதி கடலில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், டிசம்பர் முதலாம் திகதி பகல் ஈரானைச் சேர்ந்த எண்ணைக் கப்பல் ஒன்று மாலைதீவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் வைத்து குறித்த மீனவர்களை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட மீனவர்கள் ஐவரும் தற்போது ஈரானுக்கான இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறியுள்ளார்.