வாள்களுடன் வந்த இருவர் பொலிஸார் மீது தாக்குதல்!!

வவுனியா, பசார் வீதியில் மோட்டர் சைக்கிளில் வாளுடன் வந்த இருவர் கடமையில் நின்ற போக்குவரத்து பொலிசாரை தாக்கி விட்டு தப்பியோடிய சம்பவமொன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

2502-0-3319c05f5c895da98c849bcdd2193799நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, தர்மலிங்கம் வீதி வழியாக வேகமாக வந்த மோட்டர் சைக்கிள் ஒன்று பசார் வீதி வழியாக வவுனியா நகரை நோக்கிச் சென்றுள்ளது.

இதன்போது பசார் வீதியில் இருந்து மில் வீதிக்கு செல்லும் சந்தியில் போக்குவரத்து கடமையில் இருந்த இரு போக்குவரத்து பொலிசார் குறித்த மோட்டர் சைக்கிளை மறித்துள்ளனர்.

இதன்போது மோட்டர் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் போக்குவரத்து பொலிசாரை காலால் எட்டி உதைந்துள்ளார்.

இதனையடுத்து போக்குவரத்து பொலிசார் ஒருவர் நிலை தடுமாறி கீழே வீழ்ந்துள்ளார்.

போக்குவரத்து பொலிசார் கீழே வீழ்ந்ததும் மோட்டர் சைக்கிளை வேகமாக செலுத்தியபோது குறித்த மோட்டர் சைக்கிளின் பின்பக்கத்தில் இருந்தவர் தவறி கீழே விழுந்துள்ளார். மோட்டர் சைக்கிளில் கொண்டுசெல்லப்பட்ட இரண்டு வாள்களும் இதன்போது கீழே விழுந்துள்ளன. கீழே விழுந்த இளைஞன் தப்பியோட போக்குவரத்து பொலிசார் இரு வாள்களையும் மீட்டுள்ளனர்.

இதேவேளை, அவ்வீதியில் உள்ள சீ.சீ.டி.வி. கமராவை பரிசோதித்தால் குறித்த மோட்டர் சைக்கிளை கண்டுபிடிக்க முடியும் என பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.