சிறிலங்காவின் கையில் கிடைத்த மிகப்பெரிய வெளிநாட்டு கொடுப்பனவு!

நான்கு பத்தாண்டுகளுக்குப் பின்னர் சிறிலங்கா பிரதமருக்கு மிகப் பெருமளவு தொகைக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 99 ஆண்டு குத்தகை உரிமையைப் பெற்றுக் கொண்ட சீன மேர்ச்சன்ட்ஸ் குழுமம் என்ற சீன நிறுவனமே, சுமார் 292 மில்லியன் டொலருக்கான காசோலையை வழங்கியுள்ளது.

இந்தக் காசோலையை கையளிக்கும் நிகழ்வு நேற்று சிறிலங்கா நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

சீன நிறுவனத்தின் சார்பில் அளிக்கப்பட்ட காசோலையை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்களும், சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

நான்கு பத்தாண்டுகளுக்குப் பின்னர் சிறிலங்கா அரசாங்கம் ஒரே தடவையில் பெற்றுக் கொண்டுள்ள மிகப் பெரியளவிலான வெளிநாட்டுக் கொடுப்பவு இதுவாகும்.

chinese-cheque

இந்த நிதி சிறப்பு நிரந்தர வைப்புக் கணக்கில் வைக்கப்பட்டு, பின்னர் சிறிலங்காவின் வெளிநாட்டு ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த கட்டமாக, ருகுணு கைத்தொழில் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் உருவாக்கப்படும் என்று கூறினார்.

இதன்மூலம் ருணுகு பிரதேசம், கைத்தொழில் வலயமாக அபிவிருத்தி செய்யப்பட்டு, நூற்றுக்கணக்காக தொழிற்சாலைகள் உருவாக்கப்படும்.

இவ்வாறு உருவாக்கப்படவுள்ள தொழிற்சாலைகளில், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, இயற்கை எரிவாயு மின் திட்டம், சீமெந்து ஆலை என்பனவும் உள்ளடங்கியிருக்கும்.

இதற்கான பேச்சுக்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்குத் தேவையான காணிகளை அடையாளம் காணும் பணிகளை ருகணு அபிவிருத்தி அதிகாரசபை மேற்கொள்ளும்.

நவீன கடல்சார் பட்டுப்பாதையின் ஒது அங்கமாக சிறிலங்கா உள்ளது. எம்மிடம் கொழும்பு ,அம்பாந்தோட்டை, திருகோணமலை என மூன்று முக்கிய துறைமுகங்கள் உள்ளன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.